கார்த்தி மற்றும் ராஷ்மிகா நடிக்கும் சுல்தான் திரைப்படம் பற்றிய ருசிகர தகவல் !
By Sakthi Priyan | Galatta | September 27, 2020 09:39 AM IST

தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து அதில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தும் நடிகர்களில் ஒருவர் கார்த்தி. கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான கைதி படம் ரசிகர்களிடமும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதைத் தொடர்ந்து ஜோதிகாவுடன் இவர் இணைந்து நடித்த தம்பி திரைப்படம் டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸை ஒட்டி வெளியாகியிருந்தது.
இதனை தொடர்ந்து கார்த்தி ரெமோ பட இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் சுல்தான் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது. சுல்தான் படத்தை ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கிறார். கீதா கோவிந்தம்,டியர் காம்ரேட் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான ராஷ்மிகா மந்தனா இந்த படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.
விவேக்-மெர்வின் இந்த படத்திற்கு இசையமைக்கின்றனர். சதிஷ், பொன்னம்பலம் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். கே.ஜி.எஃப் வில்லன் கருடா ராம் இதில் வில்லனாக நடிக்கிறார். இந்த படத்தின் அப்டேட் குறித்து ரசிகர்கள் ஆர்வமாக காத்திருந்தனர்.
சமீபத்தில் இந்த படம் குறித்த முக்கிய அப்டேட் ஒன்றை தயாரிப்பாளர் வெளியிட்டிருந்தார். அதில் சுல்தான் படத்தின் ஷூட்டிங் 90% முடிவடைந்துள்ளது என்றும், எடிட்டிங் வேலைகளும் கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ளது. விரைவில் நிலைமை சரி ஆனவுடன் ஷூட்டிங்கை தொடங்குவோம் என்றும் அவர் தெரிவித்திருந்தார். இதனால் மிகுந்த ஆவலுடன் காத்திருந்தனர் கார்த்தி ரசிகர்கள்.
இந்நிலையில் சுல்தான் படத்தின் மீதம் உள்ள படப்பிடிப்பு பணிகள் வரும் அக்டோபர் முதல் வாரம் முதல் துவங்கவுள்ளதென நெருங்கிய திரை வட்டாரம் மூலம் தகவல் தெரியவந்துள்ளது. இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் கார்த்தி மற்றும் ராஷ்மிகாவின் ரசிகர்கள்.
இந்த படத்தை தொடர்ந்து பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கவுள்ளார் கார்த்தி. கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் ஐந்து மொழிகளில் உருவாக்கப்பட்டு படமாகிறது இதை மணிரத்னம் இயக்குகிறார். ஜெயம்ரவி, விக்ரம், ஐஸ்வர்யாராய் ஆகியோர் இந்த படத்தில் உள்ளனர். இவர்களுடன் ஜெயராம், லால், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ள இந்த படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார்.
தாய்லாந்தில் உள்ள வனப்பகுதிகளில் முதற்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்தது. இதைத்தொடர்ந்து சென்னை பாண்டிச்சேரியில் நடந்த படப்பிடிப்பிற்கு பிறகு ஹைதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டிக்கு விரைந்தனர்.கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்ட லாக்டவுனுக்கு முன்னரே இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது. பொன்னியின் செல்வன் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு இலங்கையில் நடக்கவுள்ளதாக செய்திகள் வருவதை காண முடிகிறது. எதுவாக இருந்தாலும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால் மட்டுமே உறுதியாக கூற முடியும்.
கார்த்தி கைவசம் கைதி 2, கொம்பன் புகழ் முத்தையா இயக்கும் புதிய படம் என்று நடிகர் கார்த்தியின் லைன்-அப் ப்ராஜெக்ட்டுகள் குறித்த செய்திகளை இணையத்தில் காண முடிகிறது. எதுவாக இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்த பின்னரே உறுதியாகும்.