கதைதேர்வில் எப்போதும் வித்தியாசம் காட்டும் நடிகர்களில் ஒருவர் கார்த்தி.தீபாவளிக்கு வெளியான கைதி படம் ரசிகர்களிடமும்,விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.தொடர்ந்து ஜோதிகாவுடன் இவர் இணைந்து நடித்த தம்பி படம் டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸை ஒட்டி வெளியாகி ரசிகர்களிடம் சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது.

இதனை தொடர்ந்து கார்த்தி மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன்,ரெமோ பட இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் சுல்தான் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.இரண்டு படங்களில் ஷூட்டிங்குகளுமே கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது.

சுல்தான் படத்தை ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கிறார்.கீதா கோவிந்தம்,டியர் காம்ரேட் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான ராஷ்மிகா மந்தனா இந்த படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.விவேக்-மெர்வின் இந்த படத்திற்கு இசையமைக்கின்றனர்.இந்த படத்தின் அப்டேட் குறித்து ரசிகர்கள் ஆர்வமாக காத்திருந்தனர்.

தற்போது இந்த படம் குறித்த முக்கிய அப்டேட் ஒன்றை தயாரிப்பாளர் வெளியிட்டுள்ளார்.அதில் சுல்தான் படத்தின் ஷூட்டிங் 90% முடிவடைந்துள்ளது என்றும்,எடிட்டிங் வேலைகளும் கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.விரைவில் நிலைமை சரி ஆனவுடன் ஷூட்டிங்கை தொடங்குவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.சினிமா ஷூட்டிங்குகளை நடத்த மத்திய அரசு அனுமதியளித்ததை அடுத்து எஸ்.ஆர்.பிரபு இந்த பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.