தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக திகழும் நடிகர் கார்த்தி இந்த ஆண்டு (2022) ஹாட்ரிக் ஹிட்டடித்துள்ளார். முன்னதாக கொம்பன் படத்திற்கு பின் மீண்டும் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்து வெளிவந்த விருமன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது.

இதனையடுத்து ஓட்டு மொத்த சினிமா ரசிகர்களும் ஆவலோடு காத்திருந்த இயக்குனர் மணிரத்னத்தின் கனவு படைப்பாக வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகி 450 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. இதில் வல்லவராயன் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் அனைவரின் மனதையும் கொள்ளையடித்தார் கார்த்தி.

இந்த வரிசையில் அடுத்ததாக இயக்குனர் PS.மித்ரன் இயக்கத்தில் இரட்டை வேடத்தில் கார்த்தி நடித்த சர்தார் திரைப்படம் கடந்த தீபாவளி வெளியீடாக ரிலீஸாகி தற்போது மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்க ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிட்ட சர்தார் திரைப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார்.

ரிலீசான அடுத்த சில நாட்களிலேயே தமிழகத்தில் சர்தார் திரைப்படத்திற்கு மக்களிடையே கிடைத்த அமோக வரவேற்பின் காரணமாக திரையரங்குகள் அதிகரித்ததும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து ரசிகர்களால் திரை அரங்குகளில் கொண்டாடப்பட்ட சர்தார் திரைப்படம் தற்போது பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.