பாலிவுட்டை தொடர்ந்து கன்னட திரையுலகில் போதைப்பொருள் விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் மரண வழக்கில் கைது செய்யப்பட்ட அவருடைய காதலி ரியா சக்ரபார்த்திக்கு போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் பாலிவுட்டின் டாப் ஹீரோயின்களான தீபிகா படுகோனே, சாரா அலிகான், ஷ்ரத்தா கபூர் மற்றும் ரகுல் ப்ரீத் சிங் ஆகிய 4 பேரிடமும் மும்பை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தினர். 

மேலும் கன்னட திரையுலகிலும் போதைப்பொருள் புழக்கம் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த விவகாரத்தில் பிரபல இளம் நடிகைகளான ராகிணி திரிவேதி செப்டம்பர் 4-ம் தேதி கைது செய்யபட்டார். அதையடுத்து நடிகை சஞ்சனா கல்ராணி உட்பட 14 பேர்  கைது செய்யப்பட்டனர். இவர்கள் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

இவர்கள் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு எழ, அமலாக்கத்துறையும் இருவரிடமும் விசாரணை நடத்தியது. இதனிடையே ஜாமீன் கோரி இருவரும் தாக்கல் செய்த மனுக்களும் நிராகரிக்கப்பட்டன. 

இந்நிலையில், மருத்துவ காரணங்களுக்காக தன்னை ஜாமீனில் விடுவிக்க கோரி கர்நாடகா நீதிமன்றத்தில் நடிகை சஞ்சனா கல்ராணி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, விசாரணைக்கு அழைக்கும் போது ஆஜராக வேண்டும் என்னும் நிபந்தனையுடன் நடிகை சஞ்சனா கல்ராணிக்கு ஜாமீன் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சிறையில் இருந்த நடிகைகள் ராகினி திவேதி மற்றும் சஞ்சனா கல்ராணி இருவரும் புத்தகம் படிப்பதில் அதிக ஆர்வம் காட்டினார்களாம். நேர்மறையான எண்ணத்தை ஏற்படுத்திக்கொள்ளவும், மன ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் புத்தகங்களை சிறைச்சாலையில் படித்துவருவதாகக் கடந்த மாதத்தில் கூறப்பட்டது.