கடந்த 2018-ம் ஆண்டு பரியேறும் பெருமாள் எனும் அற்புதமான படைப்பின் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்தவர் இயக்குனர் மாரி செல்வராஜ். தற்போது கலைப்புலி S தாணு தயாரிப்பில் நடிகர் தனுஷ் வைத்து கர்ணன் படத்தை இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். 

படத்தில் ரஜீஷா விஜயன் நாயகியாக நடிக்க நடிகர் லால், நட்டி நட்ராஜ், கௌரி கிஷன், லக்ஷ்மி பிரியா, யோகிபாபு ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுதும் நடந்து முடிந்தது. திருநெல்வேலி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதியில் இதன் ஷூட்டிங் நடைபெற்றது. சமீபத்தில் படத்தின் பிரத்தியேக புகைப்படங்கள் வெளியாகி அசத்தலான வரவேற்பை பெற்றது. படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் இசைப்பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார் சந்தோஷ் நாராயணன். 

இந்நிலையில் இயக்குனர் மாரி செல்வராஜ் தனது ட்விட்டர் பதிவில் தயாரிப்பாளர் கலைப்புலி S தாணுவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை பதிவு செய்துள்ளார். தயாரிப்பாளர் தாணு, தமிழ் சினிமாவின் தாரக மந்திரம் என்றே கூறலாம். படங்களை தயாரிப்பது மட்டுமல்லாமல், அதை சரியாக ப்ரோமோஷன் செய்யும் வித்தை தெரிந்தவர். சுவரொட்டி காலம் துவங்கி டிஜிட்டல் காலம் வரை தாணுவின் ப்ரோமோஷன் பணிகள் பிரமாதம். தனுஷ் நடித்த அசுரன் படத்தை தொடர்ந்து கர்ணன் படத்தையும் தயாரித்துள்ளார். இவரது பிறந்தநாளான இன்று அவருக்கு அசத்தலான வாழ்த்தை புகைப்படத்துடன் தெரிவித்துள்ளார் மாரி செல்வராஜ். 

இயக்குனரின் இந்த பதிவின் கீழ் கர்ணன் அப்டேட் ஏதாவது உண்டா ? என்று அன்பு தொல்லை செய்து வருகின்றனர் தனுஷ் ரசிகர்கள். இந்த படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜின் ஜகமே தந்திரம், கார்த்திக் நரேனின் D43 போன்ற படங்கள் தனுஷ் கைவசம் உள்ளது.