கிட்டத்தட்ட 29 ஆண்டுகளாக தமிழ்நாட்டு மக்களின் மனதை வென்ற தொலைக்காட்சியாக திகழ்கிறது சன் தொலைக்காட்சி. இன்றைய காலகட்டத்தில் பல சேனல்களுக்கு முன்னோடியாக திகழும் சன் தொலைக்காட்சி இன்று வரை நம்பர் ஒன் சேனலாக வலம் வருகிறது. அதிலும் குறிப்பாக மெகா தொடர்கள் என்றாலே சன் தொலைக்காட்சி தான் என சொல்லும் அளவிற்கு எண்ணிலடங்காத பல மெகா தொடர்களை ரசிகர்களுக்கு விருந்தாக கொடுத்துள்ளது. அந்த வகையில் தற்போது கடந்த மூன்று ஆண்டுகளாக சன் தொலைக்காட்சியில் வெற்றிகரமான மெகா தொடராக ஒளிபரப்பாகி வருகிறது கண்ணான கண்ணே.
இயக்குனர் தனுஷ் இயக்கத்தில் தயாராகி ஒளிபரப்பாகி வரும் இந்த கண்ணான கண்ணே மெகா தொடரில் நிமேஷிகா கதாநாயகியாக நடிக்க, பப்லு பிரித்விராஜ் மற்றும் ராகுல் ரவி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் வினோதினி, மானஸ் சாவளி, சுலக்சனா, அக்ஷிதா போப்பையா, பிரியா ப்ரின்ஸ், இனியா, சுவாதி தாரா, கீதா ரவிசங்கர், நித்யா ரவீந்திரன், J.லிவிங்ஸ்டன், அனுராதா, பாண்டி ரவி, சாக்ஷி சிவா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். கண்ணான கண்ணே சீரியலின் தீம் பாடலுக்கு முன்னணி இசை அமைப்பாளர் சாம்.CS இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கண்ணான கண்ணே சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் நடிகை அக்ஷிதா போப்பையா ஜீ தமிழ் தொலைக்காட்சியில் என்ட்ரி கொடுக்க உள்ளார்.
தமிழ்நாட்டு சின்னத்திரை ரசிகர்களுக்கு ஃபேவரட் சேனல்களில் ஒன்றாக திகழும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சமீபத்தில் தொடங்கப்பட்ட சீதாராமன் மெகா தொடரில் இரண்டாவது ஹீரோயினாக நடிகை அக்ஷிதா போப்பையா நடிக்க இருக்கிறார். முன்னதாக சன் டிவியின் அழகு மெகா தொடரில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகை அக்ஷிதா போப்பையா தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரெக்க கட்டி பறக்குது மனசு மெகா தொடரிலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். ஏற்கனவே ரியல் போலீஸ் எனும் கன்னட திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்த நடிகை அக்ஷிதா போப்பையா, தொடரந்து மற்றொரு கன்னட திரைப்படமான மிஸ்டர் & மிஸ்ஸஸ் எனும் திரைப்படத்திலும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் தமிழில் ஆக்சிஜன் தந்தாலே எனும் படத்திலும் முன்னணி கதாபாத்திரத்தில் நடிகை ரக்ஷிதா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது மீண்டும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தற்போது புதிதாக தொடங்கப்பட்டுள்ள சீதா ராமன் மெகா தொடரிலும் அக்ஷிதா போப்பையா இணைந்துள்ளார். ரசிகர்களின் மனம் கவர்ந்த சீரியல் நடிகையாக வலம் வரும் நடிகை அக்ஷிதா போப்பையா ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சீதா ராமன் சீரியலிலும் சிறப்பாக நடித்து ரசிகர்களின் மனதை கவர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.