சின்னத்திரையை பொறுத்தவரை ரியாலிட்டி நிகழ்ச்சிகள் என்றாலே விஜய் தொலைக்காட்சி தான் என்று சொல்லுமளவுக்கு பல வெரைட்டியில் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கொடுத்து மக்களை மகிழ்வித்து வருகிறது விஜய் தொலைக்காட்சி. அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியின் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.

உலக அளவில் மிகவும் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பிரதர் நிகழ்ச்சியின் மற்றொரு வெர்ஷன் இந்த பிக் பாஸ். இந்தியாவில் முன்னணி திரைப்பட நட்சத்திரங்கள் தொகுத்து வழங்கும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட ஏழு மொழிகளில்  ஒளிபரப்பாகிறது.

கடந்த நான்கு வருடங்களாக நான்கு சீசன்கள் இதுவரை தமிழில் நடைபெற்றுள்ளன. அவற்றில் நடிகர் ஆரவ், நடிகை ரித்விகா, பாடகர் நடிகர் முகென் ராவ் மற்றும் நடிகர் ஆரி அர்ஜுனன் உள்ளிட்டோர் இதுவரை வெற்றி பெற்றுள்ளனர். தமிழில் உலகநாயகன் கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் . 

இந்நிலையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியின் அதிகாரப்பூர்வ ப்ரோமோ வெளியானது. உலகநாயகன் கமல்ஹாசனின் இந்த மிரட்டலான புரோமோ வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனையடுத்து வருகிற அக்டோபர் மாதம் முதல் பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.