இந்திய திரையுலகின் மிகப்பெரிய ஆளுமையாகவும், எண்ணற்ற சினிமா கலைஞர்களின் முன்னோடியாகவும் விளங்கும் உலகநாயகன் கமல்ஹாசன் , இன்றும் தன் கலைத் தாகம் தீராமல் சினிமா ரசிகர்களின் ரசனையை வேறு  தளத்திற்கு உயர்த்தும் விதமாக பல புதுமைகளை புகுத்தி சிறந்த திரைப்படங்களை கொடுத்து வருகிறார். அந்த வகையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் விக்ரம் திரைப்படத்தில் நடித்துவருகிறார் உலகநாயகன். 

அதிரடி ஆக்சன் திரைப்படமாக தயாராகும் விக்ரம் திரைப்படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி & ஃபகத் பாசில் நடிக்க, நரேன், காளிதாஸ் ஜெயராம், அர்ஜுன் தாஸ், ஆண்டனி வர்கீஸ், ஷிவானி நாராயணன், மேகா ஆகாஷ் மற்றும் ஆண்ட்ரியா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். 

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகும் விக்ரம் திரைப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார். பிரபல ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவில், ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்துள்ளார். முன்னதாக வெளியான விக்ரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது விக்ரம் படத்தின் படபிடிப்பு குறித்த முக்கியத் தகவல் வெளியானது. 

பரபரப்பாக நடைபெற்று வரும் உலகநாயகனின் விக்ரம் படத்தின் படப்பிடிப்பில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் படப்பிடிப்பு தளத்தில் பைக்கில் அமர்ந்தபடி இருக்கும் உலகநாயகன் கமல்ஹாசனுடன் லோகேஷ் கனகராஜ், ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன் மற்றும் ஸ்டண்ட் இயக்குனர்கள் அன்பறிவு இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். ட்ரெண்டாகும் அந்த புகைப்படத்தை கீழே உள்ள லிங்கில் காணலாம்.