மாநகரம் & கைதி என தமிழ் சினிமா ரசிகர்களுக்கு புதுவித அனுபவத்தை கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்த மாஸ்டர் திரைப்படத்தை இயக்கினார். மாஸ்டர் படத்தின் இமாலய வெற்றியை தொடர்ந்து உலக நாயகன் கமல்ஹாசனை இயக்கும் வாய்ப்பை பெற்ற லோகேஷ் கனகராஜ் விக்ரம் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

கமல் ஹாசனுடன் இணைந்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் ஃபகத் ஃபாசில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விக்ரம் திரைப்படத்தில் ஆண்டனி வர்கீஸ், நரேன், அர்ஜுன் தாஸ், சேம்பன் வினோத், காளிதாஸ் ஜெயராம், காயத்ரி, சம்பத்ராம், ஹரிஷ் பெறடி, சிவானி, மகேஸ்வரி, மைனா, நந்தினி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகியிருக்கும் விக்ரம் திரைப்படத்திற்கு கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவில், ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்ய, அனிருத் இசையமைத்துள்ளார். RED ஜெயன்ட் மூவிஸ் வெளியிட விக்ரம் திரைப்படம் வருகிற ஜூன் 3ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் விக்ரம் திரைப்படத்தின் ட்ரைலருக்கு ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில்,  வருகிற மே 18-ம் தேதி நடைபெற இருக்கும் கேனஸ் ஃபிலிம் ஃபெஸ்டிவலில் விக்ரம் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியிடப்படும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.