உலகநாயகன் கமல்ஹாசனின் தீவிர ரசிகரான இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் FAN BOY சம்பவமாக வெளிவந்த விக்ரம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பைப் பெற்று மெகா ஹிட் பிளாக்பஸ்டர் ஆகியுள்ளது. சிறப்பு தோற்றத்தில் ரோலக்ஸ் கதாப்பாத்திரத்தில் சில நிமிடங்களே தோன்றிய சூர்யாவின் நடிப்பில் திரையரங்குகள் அதிர்ந்தன.

ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரித்துள்ள விக்ரம் படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் ஃபகத் பாஸில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.கிரிஷ் கங்காதரனின் ஒளிப்பதிவில் அனிருத் இசையில் உருவான விக்ரம் படத்திற்கு அன்பறிவு மாஸ்டர்ஸ் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றினார். 

லோகேஷ் கனகராஜ் விறுவிறுப்பான நேர்த்தியான திரைக்கதையும் அன்பறிவு மாஸ்டர்ஸின் அட்டகாசமான ஆக்ஷன் காட்சிகளும் சினிமா ரசிகர்களுக்கு ஸ்பெஷல் ட்ரீட்டாக அமைய  மற்றொருபுறம் ராக் ஸ்டார் அனிருத்தின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் விக்ரம் திரைப்படத்திற்கு பக்கபலமாக அமைந்தது.

கடந்த ஜூன் 3-ம் தேதி வெளிவந்த விக்ரம் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து வசூல் வேட்டை நடத்தி வரும் நிலையில், தற்போது இந்த 2022ஆம் ஆண்டில் தமிழக பாக்ஸ் ஆபீஸில் அதிக வசூல் செய்து சாதனை படைத்த கேஜிஎஃப் சாப்டர் 2 திரைப்படத்தின் வசூலை விக்ரம் திரைப்படம் முறியடித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.