திரை ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த உலகநாயகனாகவும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனிடம் பல ஆண்டுகளாக மேனேஜராக பயணித்தவர் டி.என்.எஸ் என்கிற டி.என்.சுப்ரமணியம் இன்று காலமானார். இவர் கமலை வைத்து குணா என்ற சூப்பர் ஹிட் படத்தை தயாரித்திருக்கிறார்.

மேலும் பிரபு, குஷ்பூ, ரஞ்சிதா நடிப்பில் சிங்கிதம் சீனிவாசராவ் இயக்கத்தில் வெளியான "சின்ன வாத்தியார்" என்கிற படத்தையும் டி.என்.எஸ். தயாரித்து இருக்கிறார். இவரது மறைவுக்கு சினிமா பிரபலங்கள் பலர் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் விக்ரம் படத்தில் நடிக்கவுள்ளார். மாநகரம்,  கைதி போன்ற திரைப்படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கமலில் அடுத்தப்படமான விக்ரம் திரைப்படத்தை இயக்குகிறார். 1986 ஆம் ஆண்டில் கமல்ஹாசன் நடித்த விக்ரம் எனும் திரைப்படம் வணிக ரீதியாக வெற்றிப் பெற்றது.  இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், சத்யராஜ், அம்ஜத்கான், அம்பிகா, டிம்பிள் கபாடியா, லிசி, சாருஹாசன், ஜனகராஜ் ஆகியோர் நடித்திருந்தனர்.

இந்த படம் ராஜ்கமல் இண்டர்நேஷனல் தயாரிக்கும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது. கமலின் 232-வது படம் இதுவாகும். அனிரூத் இந்த படத்திற்கு இசை அமைக்கிறார். மாநகரம் மூலம் வெளிச்சத்துக்கு வந்த லோகேஷ், தான் தோன்றும் ஒவ்வொரு மேடையிலும், கமல்ஹாசனின் தீவிர ரசிகன் நான், அவரின் படங்களை பார்த்து தான் சினிமாவை கற்றுக்கொண்டேன், எனச் சொல்லி வந்த நிலையில் தற்போது கமலையே இயக்க இருக்கிறார். இதனால் கமலின் படத்தை அணு அணுவாக செதுக்குவார் என்று இப்போதே அவரின் ரசிகர்கள் கூற ஆரம்பித்துவிட்டனர்.

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வரும் படம் இந்தியன் 2. லைக்கா நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தில் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், நெடுமுடி வேணு, பாபி சிம்ஹா, விவேக் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பல்வேறு மாநிலங்களில் நடைபெற்றது.

படப்பிடிப்புத் தளத்தில் விபத்து, கொரோனா அச்சுறுத்தல் எனத் தொடர்ச்சியாக இந்தப் படத்தின் படப்பிடிப்புக்குப் பல்வேறு தடங்கல்கள் ஏற்பட்டன. கரோனா அச்சுறுத்தலுக்குப் பின் படப்பிடிப்புக்கு அனுமதியளிக்கப்பட்டாலும், இன்னும் படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை. விரைவில் படப்பிடிப்பு தொடங்குவதற்காகப் படக்குழு ஆயத்தமாகி வருகிறது.