உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகும் படத்தை இயக்கவுள்ளார் லோகேஷ் கனகராஜ். அனிருத் இசையமைக்கவுள்ள இந்தப் படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு டிசம்பரில் தொடங்கி, அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

இன்று நவம்பர் 7-ம் தேதி கமல் பிறந்த நாளை முன்னிட்டு, லோகேஷ் கனகராஜ் படத்தின் பெயருடன் கூடிய டீஸர் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்தது. அதன்படி தற்போது இந்தப் படத்துக்கு விக்ரம் என அறிவித்து படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும், தலைப்புக்கான டீஸரையும் வெளியிட்டுள்ளது படக்குழு. இதனை உலக நாயகன் கமல் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். மேலும், கமல் பிறந்த நாளை முன்னிட்டு திரையுலகப் பிரபலங்கள் பலரும் அவருக்குப் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

விக்ரம் திரைப்படம் முழுக்க க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகிறது. சென்னையிலேயே ஒரே கட்டமாகப் படப்பிடிப்பை முடித்து, இந்தியன் 2 படத்திற்கு முன்பாகவே வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது. தற்போது வெளியான டீஸரில், தானே சமையல் செய்து கறி விருந்து வைக்கிறார் கமல். அரசியல்வாதிகள், காவல் அதிகாரிகள் ஆகியோர் முகமூடி அணிந்து கொண்டு கமலுடன் டேபிளில் அமர்ந்துள்ளனர். அதற்கு முன்பே தனக்கு தேவையான ஆயுதங்களை பதுக்கி தயாராக வைக்கிறார் கமல். ஆரம்பிக்கலாங்களா என்று கேட்டவுடன் அனிருத்தின் இசையுடன் விக்ரம் டைட்டில் கார்ட் தோன்றுகிறது. 

இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தீவிர கமல் ஹாசன் ரசிகர் என்பது அனைவரும் அறிந்ததே. அதனால் இந்த படத்தில் உலகநாயகனை எப்படி திரையில் காண்பிப்பார் என்ற ஆவல் ரசிகர்களிடையே வலம் வருகிறது. 
டீஸரில் அசத்திய லோகேஷ் கனகராஜூக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

கடந்த 2017-ம் ஆண்டு மாநகரம் படத்தின் மூலம் திரையுலகில் கால் பதித்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இந்த படத்திற்கு பிறகு நடிகர் கார்த்தி வைத்து கைதி திரைப்படத்தை இயக்கி வெற்றி கண்டார். இதனைத்தொடர்ந்து மாஸ்டர் படத்தை இயக்கியிருக்கிறார். 

தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி இணைந்து நடித்துள்ளனர். லாக்டவுன் அறிவிப்பதற்கு முன்பே படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதிக எதிர்பார்ப்பில் உள்ள இந்த படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகளும் நிறைவடைந்துள்ளது. மாளவிகா மோகனன், ஷாந்தனு, அர்ஜுன் தாஸ், தீனா, சேத்தன், கௌரி கிஷன் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். அனிருத் இசையில் பாடல்கள் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது.