தமிழில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான இமைக்கா நொடிகள் திரைப்படத்தில் வில்லனாக நடித்தவர் அனுராக் காஷ்யப். பிரபல பாலிவுட் இயக்குனரான இவர், பிளாக் ஃபிரைடே, தேவ்.டி, தி லன்ச் பாக்ஸ், கேங்ஸ் ஆஃப் வாசிப்பூர் உட்பட பல இந்தி படங்களை இயக்கியுள்ளார். சில படங்களில் நடித்தும் உள்ளார். இவர் மீது நடிகை பாயல் கோஷ், கடந்த சில நாட்களுக்கு பாலியல் புகார் கூறினார். இது பாலிவுட் மட்டுமின்றி சமூக வலைதளங்களில் பரபரப்பானது. 

சினிமாவில் வாய்ப்பு தேடி கொண்டிருந்தபோது அனுராக் காஷ்யப்பை மும்பையில் அவர் வீட்டில் சந்தித்தேன். என்னை தனியறைக்கு அழைத்துச் சென்றார். கட்டாயப்படுத்தி தவறாக நடக்க முயன்றார். அங்கிருந்து தப்பி வந்தேன். இந்தச் சம்பவம் 2014-2015 ஆண்டு நடந்தது. அப்போது, தனக்கு அமிதாப்பச்சன் நெருக்கமானவர் என்று அனுராக் காஷ்யப் கூறினார். மேலும், பல நடிகைகளுடன் நெருக்கமாக இருந்துள்ளதாகவும் தெரிவித்தார். 

அனுராக்கிற்கு ஆதரவாக இயக்குனர்கள், நடிகர், நடிகைகள், சக இயக்குனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். நேற்று அவர் முதல் மனைவி ஆர்த்தி பஜாஜ் ஆதரவு தெரிவித்தார். இன்றும் அவருடைய இரண்டாவது மனைவி கல்கி கோச்சலின் ஆதரவு தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். கல்கி கோச்சலினின் பதிவில், இந்த சமூக ஊடக சர்க்கஸுக்குள் நீங்கள் வரவேண்டாம். உங்கள் படைப்புகளில் பெண் சுதந்திரம் பற்றி போராடி இருக்கிறீர்கள், சினிமாவிலும் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலும் அவர்களின் நேர்மையை பாதுகாத்திருக்கிறீர்கள். நான் அதற்கு சாட்சியாக இருக்கிறேன்.

எப்போதும் என்னை உங்களுக்குச் சமமாகவே பார்த்திருக்கிறீர்கள். விவாகரத்துக்குப் பிறகும் அப்படித்தான். திருமணத்துக்கு முன்பே, ஒரு வேலைச் சூழலில் பாதுகாப்பற்றதாக உணர்ந்தபோது எனக்கு ஆதரவாக நின்றீர்கள். எல்லோரும் ஒருவரையொருவர் துஷ்பிரயோகம் செய்வதும் தவறான தகவல்களை சொல்வதுமான இந்த பயங்கரமான நேரம், ஆபத்தானதாகவும் வெறுக்கத்தக்கதாகவும் இருக்கிறது.

இது, குடும்பங்கள் மற்றும் நண்பர்களை அழித்து வருகிறது. இதை விட்டுவிட்டு, உங்களைச் சுற்றி இருப்பவர்களின் தேவைகளுக்கு கவனம் செலுத்தும் கண்ணியமான வேலையை தொடங்குங்கள், வலிமையாக இருங்கள் என்று கல்கி கோச்சலின் பதிவு செய்துள்ளார். 

இந்திய திரையுலகில் பிரபலமான நடிகைகளுள் ஒருவர் கல்கி கோச்சலின். 2007-ம் ஆண்டு திரைப்பயணத்தை துவங்கியவர், தேவ் டி, சைத்தான், த்ரிஷ்னா, ஷாங்காய், ஹேப்பி என்டிங், கல்லி பாய் உட்பட பல படங்களில் படங்களில் நடித்துள்ளார். வினோத் இயக்கத்தில் தல அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். ஒரே ஒரு பாடலுக்கு தோன்றினாலும், அசத்தலான நடனத்தை வெளிப்படுத்தியிருப்பார் கல்கி. பாண்டிச்சேரியில் பிறந்து வளர்ந்த இவரது பெற்றோர் பிரெஞ்ச் நாட்டை சேர்ந்தவர்கள்.  

இவரும் பிரபல இந்தி பட இயக்குனர், நடிகர் அனுராக் காஷ்யப்பும் காதலித்து கடந்த 2011-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். அனுராக்கிற்கு இது இரண்டாவது திருமணம். பின்னர் கடந்த சில வருடங்களுக்கு முன் பிரிந்த இவர்கள், 2015 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். 

இதற்கிடையே, இஸ்ரேல் நாட்டை சேர்ந்த கய் ஹெர்ஸ்பர்க் என்பவரை காதலித்து வந்தார் நடிகை கல்கி. இவர்கள் திருமணம் செய்துகொள்ளாமல் லிவிங்கில் வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு சப்போ என்ற பெண் குழந்தைப் பிறந்தது. 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

@anuragkashyap10

A post shared by Kalki (@kalkikanmani) on