தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் ஜெயராம் அவர்களின் மகனான நடிகர் காளிதாஸ் ஜெயராம் திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளிலும் கதாநாயகனாக நடித்து வருகிறார். அடுத்ததாக காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது.

முன்னதாக சில மாதங்களுக்கு முன்பு நெட்பிளிக்ஸ் OTT தளத்தில் வெளியான பாவக் கதைகள் ஆண்தாலஜி வெப்சீரிஸில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளிவந்த தங்கம் எபிசோடில் சத்தார் எனும் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்த காளிதாஸ் ஜெயராமின் அடுத்த திரைப்படம் குறித்து மிகுந்த எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளது.

 

இதனைத் தொடர்ந்து இயக்குனர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் காளிதாஸ் ஜெயராம். கதாநாயகியாக தன்யா ரவிச்சந்திரன் நடிக்கிறார். ரிச்சர்ட்.எம்.நாதன் ஒளிப்பதிவு செய்ய சைமன்.கே.கிங் இசையமைக்கிறார். லாரனஸ் கிஷோர் படத்தொகுப்பு செய்கிறார்.

ரைஸ்ட் என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரிப்பாளர் சாகர் பெண்ட்டளா தயாரிப்பில் உருவாகும் இந்த புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. இதன் படப்பிடிப்பை படக்குழுவினர் மரக்கன்றுகளை நட்டுவைத்து மரம் வளர்ப்பதன் அவசியத்தை உணர்த்தும் விதமாக விழிப்புணர்வோடு துவக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இனி தொடர்ந்து இப்படத்தின் இதர அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.