இந்திய சினிமா உலகில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகர்களில் ஒருவர் சூர்யா. திரைக்கு பின்னாலும் ஹீரோவாக திகழும் சூர்யா பல மாணவர்களின் கல்விக்கு உதவி செய்து வருகிறார். நடிகர் சூர்யா படங்கள் நடிப்பது மட்டுமின்றி தயாரிப்பதிலும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். 23 ஆண்டுகள் தன் நடிப்பின் மூலம் ஆறிலிருந்து அறுவது வரை என அனைத்து தரப்பு ரசிகர்களையும் பெற்ற ஆதர்ஷ நாயகன்.

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் சூரரைப் போற்று திரைப்படம் தீபாவளி விருந்தாக வெளியானது. சூர்யாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான 2D என்டர்டெயின்மென்ட் இந்த படத்தை தயாரித்திருந்தது. ஏர் டெக்கான் கோபிநாத் வாழ்க்கையை மையப்படுத்தி இப்படம் உருவாகியிருந்தது. அமேசான் ப்ரைமில் வெளியான இப்படம் சூர்யா ரசிகர்கள் கொண்டாடும் வகையில் அமைந்தது. 

இதைத் தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் படம் வாடிவாசல். இந்த திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். முதல்முறையாக சூர்யா - வெற்றிமாறன் கூட்டணி இணைந்திருப்பதாலும், ஜல்லிக்கட்டு தொடர்புடைய கதை என்பதாலும் இந்தப் படத்தின் மீது ரசிகர்களிடம் அதிகம் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

வாடிவாசல் என்ற நாவல் எழுத்தாளர் சி.சு.செல்லப்பா எழுத்தில் 1959-ம் ஆண்டு வெளியானது. இப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சூர்யாவின் பிறந்தநாளான ஜுலை 23ம் தேதியன்று அறிவிக்கப்பட்டது. அன்றே படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது.

இந்நிலையில் ஒரு போலியான சமூக வலைத்தள கணக்கிலிருந்து இப்படம் பற்றிய தவறான தகவல் ஒன்று வெளிவந்தது. இது குறித்து விளக்கமளித்த தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, எண்ணியது எண்ணியபடி, சொல்லியது சொல்லியபடி, வெற்றி மாறன்இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் வலம் வரும், வாகை சூடும்...என பதிவு செய்துள்ளார். 

படம் பற்றிய அப்டேட்டை எதிர்பார்த்திருந்த சூர்யா ரசிகர்களுக்கு தயாரிப்பாளரின் அறிவிப்பு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெற்றிமாறன், சூர்யா முதல் முறையாக இணையும், இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

வாடிவாசல் திரைப்படம் குறித்து சமீபத்தில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷும் ஓர் உரையாடலின் போது பதிவு செய்திருந்தார். அதில் இது ரொம்பவே முக்கியமான படம். நம்முள் கலந்திருக்கும் இசை, இப்படத்தில் நிரம்பியிருக்கும். ஜல்லிக்கட்டுக்காக ஒரு ஸ்பெஷல் தீம் இசையை அமைக்கவுள்ளதாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.