தமிழ் திரையுலகின் ஆகச்சிறந்த நடிகையான ரேவதி அவர்கள், தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என இந்திய சினிமாவின் பல மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்து, தன் சிறந்த நடிப்பால் மக்கள் மனதில் இடம் பிடித்தவர்.இந்திய சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த நடிகை ரேவதி திரைத்துறையில் எண்ணற்ற விருதுகளையும் வென்று குவித்துள்ளார். 

நடிகையாக மட்டுமல்லாமல் இயக்குனராகவும், இவர் இயக்கிய முதல் படமான MITR மை ஃபிரண்ட் எனும் ஆங்கிலத் திரைப்படம் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.நடிப்பிலும் இயக்கத்திலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வரும் நடிகை ரேவதியின் இயக்கத்தில் தயாராகவுள்ள அடுத்த திரைப்படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று வெளியானது.

பிலிவ் புரோடக்சன்ஸ் மற்றும் டேக் 23 ஸ்டுடியோஸ் புரோடக்சன்ஸ் சார்பில் சுராஜ் சிங் மற்றும் ஷ்ரத்தா அகர்வால் இணைந்து தயாரிக்கும் “தி லாஸ்ட் ஹுர்ரா" திரைப்படத்தை நடிகை ரேவதி இயக்குகிறார். சவாலான சூழ்நிலைகளை சமாளிக்கும் ஒரு தாயின் போராட்டத்தை கதைக்களமாகக் கொண்ட தி லாஸ்ட் ஹுர்ரா படத்தில் கதாநாயகியாக முன்னணி பாலிவுட் நடிகை கஜோல் நடிக்கிறார். 

முதல்முறையாக நடிகை ரேவதியின் இயக்கத்தில் நடிகை கஜோல் நடிக்க உள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகை கஜோல் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். விரைவில் தி லாஸ்ட் ஹுர்ரா படத்தின் அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக தமிழில் நடிகை கஜோல் நடித்த மின்சார கனவு திரைப்படத்தில் கஜோலுக்கு பின்னணி குரல் கொடுத்தவர் நடிகை ரேவதி என்பது குறிப்பிடத்தக்கது.