க்யுன் ஹோ கயா னா என்ற ஹிந்தி படத்தின் மூலம் திரையுலகில் கால் பதித்தவர் நடிகை காஜல் அகர்வால். தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக இருக்கும் காஜல், தமிழில் பரத் நடித்த பழனி திரைப்படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து பொம்மலாட்டம், சரோஜா, நான் மஹான் அல்ல, மாற்றான் போன்ற படங்களில் நடித்தார். தளபதி விஜய்யுடன் துப்பாக்கி, மெர்சல், ஜில்லா போன்ற படங்களில் இவரது நடிப்பு பெரியளவில் பேசப்பட்டது. தல அஜித்துடன் விவேகம் படத்தில் நடித்திருந்தார். 

காஜல் அகர்வால் நடிக்க வந்து 16 ஆண்டுகள் ஆகிறது. இன்னும் பிசியான நடிகைகளில் ஒருவராகவே திகழ்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். காஜல் அகர்வாலின் தங்கையான நிஷாவும் அக்கா வழியில் நடிகை ஆனார் என்பது அனைவரும் அறிந்ததே. சிறிது காலம் நடித்த நிஷா, தொழில் அதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு சினிமாவில் இருந்து விலகினார். நிஷா அகர்வாலுக்கு ஒரு மகன் இருக்கிறார். 35 வயதாகும் காஜல் அகர்வாலுக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க அவரின் பெற்றோர் விரும்பினர்.

இந்நிலையில் காஜல் அகர்வாலுக்கும், மும்பையை சேர்ந்த தொழில் அதிபர் கவுதம் கிட்ச்லுவுக்கும் வரும் அக்டோபர் 30-ம் தேதி மும்பையில் திருமணம் நடைபெறவுள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை காஜல் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். காஜலுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் அவரது ரசிகர்கள். 

இவர்கள் இருவருக்கும் ரகசியமாக நிச்சயதார்த்ததம் நடந்துவிட்டதாக கடந்த ஆகஸ்ட் மாதம் தகவல் வெளியானது. அந்த நிச்சயதார்த்தத்தில் காஜலின் நெருங்கிய நண்பரான தெலுங்கு நடிகர் ஸ்ரீனிவாஸ் பெல்லம்கொண்டா கலந்து கொண்டதாக பேசப்பட்டது. ஆனால் நிச்சயதார்த்தம் குறித்து காஜல் எதுவும் தெரிவிக்கவில்லை. தற்போது காஜலுக்கும், கவுதமுக்கும் விரைவில் திருமணம் என்று செய்திகள் வெளியாகி இணையத்தை அதிர வைத்து வருகிறது. கவுதம் ஒரு தொழில் அதிபர், இன்டீரியர் டிசைனராக உள்ளார். மாரதான் பிரியரும் கூட. 

இரண்டு நாட்கள் நடக்கும் இந்த திருமண நிகழ்ச்சியில் இரு வீட்டாரும், நெருங்கிய நண்பர்கள் சிலரும் மட்டுமே கலந்து கொள்ளப் போகிறார்களாம். இது பெற்றோர் பார்த்து நடத்தும் திருமணம் என்று கூறப்படுகிறது. லாக்டவுனுக்கு முன்பு காஜல் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசனுடன் சேர்ந்து இந்தியன் 2 படத்தில் நடித்து வந்தார். இந்தியன் 2 செட்டில் நடந்த விபத்தில் காஜல் நூலிழையில் உயிர் பிழைத்தார் என்பது அனைவரும் அறிந்ததே. 

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து 1996-ம் ஆண்டு வெளியாகி வெற்றிகரமாக ஓடிய திரைப்படம் இந்தியன். இப்படத்தின் இரண்டாம் பாகம் இப்போது தயாராகிறது. லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கி வருகிறார். 24 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியன் தாத்தாவான சேனாபதியை மீண்டும் காண ஆவலில் உள்ளனர் திரை ரசிகர்கள். விவேக், டெல்லி கணேஷ், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி ஷங்கர் போன்ற நட்சத்திரங்கள் இதில் உள்ளனர். 

மேலும் தன் நண்பர் ராம் சரணின் தந்தை சிரஞ்சீவி ஜோடியாக ஆச்சார்யா படத்தில் நடிக்கிறார் காஜல். அவர் திருமணத்திற்கு பிறகும் நிச்சயம் நடிப்பை தொடர்வார் என்று நம்பப்படுகிறது. பிருந்தா இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிக்கும் ஹே சினாமிகா படத்திலும் காஜல் நடிக்கவுள்ளார்.