கா.பெ.ரணசிங்கம் படத்தின் புன்னகையே பாடல் வெளியானது !
By Sakthi Priyan | Galatta | September 17, 2020 17:06 PM IST

விஜய்சேதுபதி நடிப்பில் உருவான திரைப்படம் கா.பெ. ரணசிங்கம். ஐஸ்வர்யா ராஜேஷ் ஹீரோயினாக முக்கிய ரோலில் நடித்துள்ளார். விருமாண்டி இயக்கிய இந்த படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வந்தது படக்குழு. கொரோனா அச்சுறுத்தலால் அந்தப் பணிகள் பாதிக்கப்பட்டன. இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
வேல.ராமமூர்த்தி, ரங்கராஜ் பாண்டே, பவானி ஸ்ரீ உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை பார்த்துவிட்டு இசையமைப்பாளர் ஜிப்ரான் பாராட்டி பதிவு செய்திருந்தார். பின்னணி இசைக்கான பணிகளை முடித்தார். அறம் படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவின் மிக முக்கியமான படம் இது. இதில் ஒரு அங்கமாக இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன் என்றும் புகழாரம் சூட்டினார்.
இந்த படத்தில் விஜய் சேதுபதி சமுதாயத்தில் இருக்கும் பல்வேறு பிரச்சனைகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் நபராக நடித்திருக்கிறார். குறிப்பாக தண்ணீரை வியாபாரம் ஆக்கிய சிலருக்கு எதிராக அவர் போராட்டம் நடத்துவது போல படத்தின் டிரைலரில் காட்டப்பட்டிருந்தது.
சில நாட்களுக்கு முன் இந்த படத்தில் இருந்து முதல் பாடலான அழகிய சிறுக்கி பாடலை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருக்கிறது. டி சீரிஸ் நிறுவனத்தின் யூடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த லிரிக்கல் வீடியோவுக்கு தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அழகிய சிறுக்கி பாடலுக்கு வைரமுத்து வரிகள் எழுத கோல்ட் தேவராஜ் என்பவர் பாடியிருந்தார்.
க/பெ ரணசிங்கம் படம் ரிலீஸுக்கு தயாராக இருக்கும் சூழ்நிலையில் தியேட்டர்கள் தற்போது மூடப்பட்டு இருப்பதால், இதனை Zeeplex தளத்தில் வரும் அக்டோபர் 2-ம் தேதி முதல் வெளியிட திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர். அக்டோபர் 2-ம் தேதி முதல் உலகம் முழுவதும் இந்த படம் வெளியாகும். இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் திரை விரும்பிகள்.
தற்போது இந்த படத்திலிருந்து இரண்டாம் பாடலான புன்னகையே பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. சுந்தரய்யர் பாடிய இந்த பாடல் வரிகளை வைரமுத்து எழுதியுள்ளார். இந்த பாடல் இசை பிரியர்களை ஈர்த்து வருகிறது.