தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவரான நடிகை ஜோதிகாவின் 50வது படம் உடன்பிறப்பே. நடிகர் சூர்யா தனது தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மென்ட் சார்பில் சிறந்த திரைப்படங்களை தயாரித்து வருகிறார். தொடர்ந்து நான்கு மாதங்கள் , மாதம் ஒரு  திரைப்படமாக அமேசான் பிரைம் வீடியோவில் நடிகர் சூர்யா தயாரிப்பில் உருவான திரைப்படங்கள் வெளியாகின்றன.

கடந்த செப்டம்பர் 24-ஆம் தேதி இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் திரைப்படம் வெளியான நிலையில் இந்த ஆண்டு தீபாவளி வெளியீடாக நவம்பரில் சூர்யாவின் ஜெய்பீம் திரைப்படமும், டிசம்பர் மாதம் அருண் விஜய் நடிப்பில் ஓ மை டாக் திரைப்படமும் வெளிவரவுள்ளது. முன்னதாக அக்டோபர் மாதம் வெளிவருகிறது ஜோதிகா நடித்த உடன்பிறப்பே திரைப்படம்.

இயக்குனர் இரா.சரவணன் எழுதி இயக்கியுள்ள உடன்பிறப்பே திரைப்படத்தில் ஜோதிகாவுடன் இணைந்து இயக்குனர் சசிகுமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, இயக்குனர் சமுத்திரக்கனி, சூரி, வேல ராமமூர்த்தி, கலையரசன், ஷிஜா ரோஸ், குக் வித் கோமாளி தீபா, நிவேதிதா சதீஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

முன்னணி ஒளிப்பதிவாளர் R.வேல்ராஜ் ஒளிப்பதிவில், ரூபன் படத்தொகுப்பு செய்துள்ள உடன்பிறப்பே படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். வருகிற அக்டோபர் 14-ஆம் தேதி ஆயுத பூஜை வெளியீடாக உடன்பிறப்பே திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் அமேசானின் வீடியோவில் வெளியாகிறது. எனவே அடுத்ததாக உடன்பிறப்பே படத்தின் டீசர் , டிரைலர் & பாடல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.