ஹாலிவுட் திரையுலகின் முன்னணி நட்சத்திர நாயகராக வலம் வரும் நடிகர் ஜானி டெப் உலக அளவில் பல கோடி ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோவாக திகழ்கிறார். குறிப்பாக பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் படங்களில் நடித்த ஜாக் ஸ்பேரோ கதாபாத்திரத்தை யாரும் மறந்து விட முடியாது.

முன்னதாக கடந்த 2015 ஆம் ஆண்டு நடிகர் ஜானி டெப்-அமெரிக்க நடிகை ஆம்பெர் ஹெர்ட்டை திருமணம் செய்து கொண்டார். திருமணமான அடுத்த 15 மாதங்களில் இவர்கள் இருவரும் தங்களது திருமண வாழ்க்கையில் இருந்து பிரிந்து விவாகரத்து பெற்றுக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர் கடந்த 2018-ஆம் ஆண்டு “வாஷிங்டன் போஸ்ட்” பத்திரிகைக்கு ஒரு கட்டுரை எழுதிய ஆம்பெர் ஹெர்ட் அதில் பெண்கள் சந்திக்கும் பாலியல் துன்புறுத்தல் குறித்து எழுதியிருந்தார். குறிப்பாக ஜானி டெப்பின் பெயரை குறிப்பிடாமல் தன்னை அவர் மிகவும் துன்புறுத்தியதாக எழுதியிருந்தார். ஹாலிவுட் திரையுலகை அதிர வைத்த இந்த கட்டுரையின் எதிரொலியாக நடிகர் ஜானி டெப் பல பட வாய்ப்புகளை இழந்தார்.

இதனையடுத்து நடிகர் ஜானி டெப், நடிகை ஆம்பெர் ஹெர்ட் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் கடந்த சில வாரீங்களில் இறுதி கட்ட விசாரணை நடைபெற்றது. அந்த விசாரணையில் நடிகை ஆம்பெர் ஹெர்ட் கூறியது அனைத்தும் பொய் என்பது ஆதாரங்கள் மூலமாக நிரூபணமானது.

இந்நிலையில் நடிகை ஆம்பெர் ஹெர்ட் மீது நடிகர் ஜானி டெப் தொடர்ந்த அவதூறு வழக்கில் தற்போது நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நடிகை ஆம்பெர் ஹெர்ட், நடிகர் ஜானி டெப்புக்கு 116 கோடி ரூபாய் இழப்பீடு செலுத்த வேண்டும் என நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.