இந்திய திரையுலகமே எதிர்பார்த்து காத்திருக்கும் மிகப் பிரம்மாண்ட படைப்பாக தயாராகிவருகிறது பொன்னியின் செல்வன். புகழ்பெற்ற எழுத்தாளர் கல்கியின் அற்புதப் படைப்பான பொன்னியின் செல்வன் நாவலை தழுவி தயாராகும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இயக்குனர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைக்கா புரொடக்சன்ஸ் இணைந்து தயாரித்துள்ளது.

பொன்னியின் செல்வனின் முக்கிய கதாபாத்திரங்களாக ஆதித்த கரிகாலன், வந்தியத்தேவன், அருள்மொழிவர்மன், நந்தினி, குந்தவை, பெரிய பழுவேட்டரையர், சின்ன பழுவேட்டரையர், ஆழ்வார்க்கடியான் நம்பி, சுந்தர சோழர், பூங்குழலி ஆகிய கதாபாத்திரங்களில் நடிகர்கள் சீயான் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, சரத்குமார், பார்த்திபன், ஜெயராம், பிரகாஷ் ராஜ் மற்றும் ஐஸ்வர்யா லக்ஷ்மி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

மணிரத்னம் இயக்கத்தில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு இந்தியாவின் சிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்து வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது நடிகர் ஜெயம்ரவி இது குறித்த ருசிகர தகவலை பகிர்ந்துள்ளார்.

இரண்டு பாகங்களாக தயாராகும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் தன் பகுதி காட்சிகள் அனைத்தையும் நடித்து முடித்துவிட்டார் நடிகர் ஜெயம் ரவி. இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இரண்டு பாகங்களாக தயாராகும் பொன்னியின் செல்வனில் தன் பகுதியின் மொத்த படப்பிடிப்பையும் நடிகர் ஜெயம் ரவி தற்போது நிறைவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பொன்னியின் செல்வன் குறித்த அடுத்தடுத்த அதிரடி அறிவிப்புகள் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.