கனா கண்டேன் படத்தின் மூலம் தமிழ் திரையில் அறிமுகமானவர் நடிகர் பிரித்விராஜ். அதன் பின் பாரிஜாதம், மொழி, சத்தம் போடாதே, நினைத்தாலே இனிக்கும், அபியும் நானும், ராவணன் போன்ற படங்களில் நடித்து அவருக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். மலையாளத்தில் முன்னணி ஸ்டாராக இருக்கும் பிரித்விராஜ் மோகன்லால் நடிப்பில் லூசிஃபர் என்ற படத்தையும் இயக்கியுள்ளார். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான அய்யப்பனும் கோஷியும் என்ற சூப்பர் ஹிட் திரைப்படம் வெளியானது. 

கடந்த ஆண்டு ஆடு ஜீவிதம் படப்பிடிப்பிற்காக ஜார்டன் சென்றவர், கொரோனா வைரஸ் பிரச்சனை காரணமாக, படக்குழுவுடன் அங்கேயே சிக்கி கொண்டார். அதன் பின் பத்திரமாக சொந்த ஊர் திரும்பிய கதை அனைவரும் அறிந்ததே. 

இந்நிலையில் பிரித்விராஜ் நடிப்பில் ஜனகனமன படத்தின் ப்ரோமோ காட்சி வெளியானது. காவல் நிலையத்தில் போலீஸ் விசாரிப்பது போல் காட்சி இடம்பெற்றுள்ளது. இந்த படத்தில் சுராஜ் வெஞ்சரமூடு, ஸ்ரீ திவ்யா ஆகியோர் நடித்துள்ளனர். டியோ ஜோஸ் ஆண்டனி இந்த படத்தை இயக்கியுள்ளார். சுப்ரியா மேனன் மற்றும் லிஸ்டின் ஸ்டீபன் தயாரித்துள்ளனர். 

ஜனகணமன படப்பிடிப்பில் கலந்துகொண்ட போது தான் நடிகர் பிரித்விராஜூக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு தனிமைப்படுத்திக் கொண்டார். பின்னர் அவர் குணமானது அனைவரும் அறிந்ததே. மேலும் இயக்குனர் டியோ ஜோஸுக்கும் கொரோனா ஏற்பட்டது. 

இந்த படத்தை தொடர்ந்து பிரித்விராஜ் கைவசம் கோல்டு கேஸ் என்ற படம் உள்ளது. அதிதி பாலன் நாயகியாக நடிக்கிறார். இப்படத்தைத் தானு பலக் இயக்கவுள்ளார். பிளான் ஜே ஸ்டுடியாஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. பிரகாஷ் அலெக்ஸ் இசையமைக்கும் இப்படத்துக்கு ஸ்ரீநாத் திரைக்கதை எழுதுகிறார்.