தென்னிந்திய சினிமாவின் உச்ச நட்சத்திர நாயகர்களில் ஒருவராகவும் பல கோடி ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோவாகவும் திகழும் தளபதி விஜயின் வாரிசு திரைப்படம் வருகிற பொங்கல் வெளியீடாக ஜனவரி 12ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. முன்னதாக ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த தளபதி விஜய் வாரிசு பட இசை வெளியீட்டு விழா கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
 
வழக்கம் போல் இந்த முறையும் தளபதி விஜயின் பேச்சும் குட்டி ஸ்டோரியும் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர்களில் ஒருவராக சுப்ரமணியபுரம், நாணயம், பசங்க, ஈசன் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் வாரிசு இசை வெளியீட்டு விழாவிற்கு வந்த தளபதி விஜயின் தோற்றத்தை விமர்சித்த தனது ஃபேஸ்புக் தளத்தில் பதிவிட்டுள்ளது தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
 
அந்தப் பதிவில், 
'வாரிசு' பட விழா தொலைக்காட்சியில் போய்க்கொண்டிருந்தது. தற்செயலாக ஒரு கணம் எட்டிப்பார்த்தேன். விஜய் பேசிக்கொண்டிருந்தார். முதல் பார்வையிலேயே அவர் தோற்றம் மனதைச் சற்று நெருடியது. தலையை இன்னும் கொஞ்சம் சீர்படுத்தி, தாடியைக் கொஞ்சம் நெறிபடுத்தி, இந்த பிரம்மாண்ட விழாமேடைக்கேற்ற உடையணிந்திருக்கலாம் என்று தோன்றியது. அது எளிமை என்று அவர் நினைத்திருக்கலாம்; அல்லது அவர் ரசிகர் வாதிடலாம். Simplicity and appropriateness are two different things. எளிமையும், அவைப் பொருத்தமும் வெவ்வேறு விஷயங்கள்.
இதைப் பொதுவாகத்தான் சொல்கிறேன். நாம் ஒரு வேலைக்கு, நேர்முகத் தேர்வுக்கு போகும்போது ஏன் அவ்வளவு பொறுப்பாக பார்த்துப் பார்த்து உடையணிந்து செல்கிறோம்? ஒவ்வொரு இடத்துக்கும் ஏற்ற தோற்ற வரைமுறை உண்டுதானே? ஒரு நடிகனின் ஒவ்வொரு அசைவையும் அப்படியே கிரகிக்கிற, பின்பற்றுகிற பாமர ரசிகர்மேல் கதாநாயகர்கள், அதுவும் விஜய் போன்ற உச்சபச்ச நாயகன் ஏற்படுத்துகிற தாக்கம் அதி தீவிரமானது. தன் திரை நாயகனை அன்றாட வாழ்வில் ஒவ்வொரு அசைவிலும் பிரதிபலிக்கிற கடைநிலை இளைஞனுக்கு சொல்லாமல் சொல்லிக் கொடுக்கவேண்டிய விஷயங்களில் இதுவும் ஒன்று.
எந்த நிகழ்வுக்கு எப்படி உடையணிந்து செல்லவேண்டும் என்பதை அவன் எங்கே போய் கற்றுக்கொள்வான்? சினிமாவும், கிரிக்கெட்டும் உயிர்மூச்சாக ஆகிவிட்ட இந்தியாவில் இத்துறைகளில் உள்ளவர்க்கென்று சில பொறுப்புகள் உள்ளன, நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும். நீங்கள் திரைப்படங்களில் எல்லாவித ஆடம்பர ஆடைகளையும் அணிந்து சலித்துப்போய் நிஜவாழ்வில் இப்படி எளிமையாக இருக்க விரும்புவதையும் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனாலும் பொதுமேடையாயிற்றே. வெறித்தனமான இளைஞன் உங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறானே.
ஹாலிவுட்டிலும் பாலிவுட்டிலும், ஆந்திராவிலும் கூட யாருமே இந்த அம்சத்தில் அலட்சியம் காட்டுவதில்லையே. நட்சத்திரங்கள் வசதியானவர்கள் என்பது வெட்டவெளிச்சந்தானே. யாரும் உங்களைத் தவறாக நினைக்கமாட்டார்கள். தன் நாயகன் அழகாக வந்தால் முதலில் மகிழ்பவன் உங்கள் ரசிகன்தான்!..  முறையான அரங்க நிகழ்வுகளில் நன்கு அலங்கரித்து வாருங்கள். விடுமுறைகளில் மனம்போல் அணிந்து மகிழுங்கள். இந்த நடைமுறை வரைமுறைகளை உங்களைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றும் இளைஞருக்குக் கற்றுக்கொடுங்கள்.

என தெரிவித்துள்ள இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனின் அந்த பதிவு இதோ…