இயக்குனர் வசந்த பாலன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடித்து உருவாகியுள்ள திரைப்படம் ஜெயில். ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக அபர்நிதி நடித்துள்ளார். ராதிகா, ரோபோ ஷங்கர், யோகிபாபு போன்றோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர்.  கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். 

இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகளும் நிறைவடைந்தது. சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடலான காத்தோடு காத்தானேன் பாடல் வெளியாகி இசை பிரியர்களை ஈர்த்தது. தனுஷ் மற்றும் அதிதி ராவ் பாடிய இந்த பாடல் வரிகளை கபிலன் எழுதியிருந்தார். இந்த படத்தின் ஆடியோ உரிமையை கைப்பற்றிய சோனி நிறுவனம் கைப்பற்றியது. 

தற்போது ஜெயில் படத்தின் இரண்டாம் பாடல் குறித்து பதிவு செய்துள்ளார் ஜிவி. இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் இரண்டாம் பாடல் வரிகளை பதிவு செய்துள்ளார். பத்து காசு இல்லன்னாலும் பணக்காரண்டா...என் சொத்து சுகம் எல்லாமே என் நண்பன் தானடா... இந்த பாடல் வரிகளை பாடலாசிரியர் அறிவு எழுதியுள்ளார். வரும் ஆகஸ்ட் 18-ம் தேதி மாலை 6 மணியளவில் இந்த பாடல் வெளியாகும் என்றும் பதிவு செய்துள்ளார். 

சூரரைப்போற்று திரைப்படத்தில் மாறா தீம் பாடல் அறிவு தான் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது. மாஸ்டர் படத்திலும் வாத்தி ரைடு எனும் பாடலை அறிவு எழுதி பாடியிருந்தார். ராப் சிங்கரான தெருக்குரல் அறிவு-க்கென ரசிகர்கள் ஏராளம். இந்த பாடலிலும் அசத்தியிருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

கடைசியாக ஜிவி பிரகாஷ் நடிப்பில் சிவப்பு மஞ்சள் பச்சை திரைப்படம் வெளியாகி ஹிட் அடித்தது. இதனைத் தொடர்ந்து ஹாலிவுட் படமான ட்ராப்சிட்டி படத்தில் நடித்துள்ளார். ஜிவி பிரகாஷ் இசையில் சூரரைப் போற்று ஆல்பம் வெளியாகி ரசிகர்களின் செவிகளுக்கு விருந்தளித்தது. அதிக இளைஞர்களை ரசிகர்களாக கொண்டுள்ள ஜிவி பிரகாஷ், சமீபத்தில் ராஜபாளையம் நாய்களின் அருமையை பிரதிபலிக்கும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மிஸ்டர் ஹாப்பி என்ற செல்ல பிராணியை பற்றிய குறும்படமாகும். செல்லப்பிராணியின் அருமையை உணர்த்திய அந்த வீடியோ இணையத்தில் வைரலானது. 

லாக்டவுன் முடிந்து இயல்பு நிலை திரும்பியவுடன் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் வாடிவாசல் படத்திற்கும் இசையமைக்கவுள்ளார் ஜிவி பிரகாஷ். கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் D43 படத்திற்கும் ஜிவி பிரகாஷ் தான் இசை என்பது குறிப்பிடத்தக்கது.