தமிழ் திரை உலகின் பிரபல நடிகராகவும் திரை எழுத்தாளராகவும் வலம் வருபவர் மணிகண்டன். விக்ரம் வேதா திரைப்படத்தில் வசனகர்த்தாவாக கவனத்தை ஈர்த்த நடிகர் மணிகண்டன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் காலா, சில்லுக்கருப்பட்டி, நயன்தாராவின் நெற்றிக்கண்  மற்றும் சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்த ஜெய்பீம் உள்ளிட்ட பல படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் விஸ்வாசம், தம்பி உள்ளிட்ட பல படங்களுக்கு எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ள மணிகண்டன் சில தினங்களுக்கு முன் வெளியான சில நேரங்களில் சில மனிதர்கள் படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே நடிகர் மணிகண்டன் இயக்கிய நரை எழுதும் சுயசரிதம் திரைப்படம் தற்போது OTT தளத்தில் வெளியாகி உள்ளது.

சர்வதேச விருதுகளைப் பெற்ற நரை எழுதும் சுயசரிதம் திரைப்படத்தை மணிகண்டன் எழுதி இயக்கியுள்ளார். ஜி&கே புரொடக்ஷன்ஸ் தயாரித்த இப்படத்தில் மணிகண்டன் உடன் இணைந்து டெல்லிகணேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, மிர்ச்சி விஜய், ஆதவன்,RJ சிவசங்கரி, பிரவீன் ராஜா, ஷோபனா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இசையமைப்பாளர்கள்  ரதன் மற்றும் பவன் இணைந்து இசை அமைத்துள்ள நரை எழுதும் சுயசரிதம் படத்திற்கு ஆர்.வசந்தகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில் 7 ஆண்டுகளுக்குப் பிறகு இத்திரைப்படம் முதல்முறையாக ரசிகர்களின் பார்வைக்காக SonyLIV OTTதளத்தில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.