தமிழ் திரை உலகின் மிகச் சிறந்த திரைப்படங்களில் ஒன்றாக கடந்த ஆண்டு தீபாவளி வெளியீடாக வெளிவந்த ஜெய்பீம் திரைப்படம் அனைவரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்தது. நேரடியாக அமேசான் ப்ரைம் வீடியோவில் ரிலீஸான ஜெய்பீம் திரைப்படத்தை தனது 2டி என்டர்டெய்ன்மெண்ட் சார்பில் நடிகர் சூர்யா தயாரித்து நடித்திருந்தார்.

இயக்குனர் T.J.ஞானவேல் இயக்கத்தில் மலைக் கிராமங்களில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு நேர்ந்த அநீதிகளை மையப்படுத்திய உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான ஜெய்பீம் திரைப்படம் உலக அளவில் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டதோடு பல்வேறு விருதுகளையும் வென்று குவித்தது.

ஜெய்பீம் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் TJ.ஞானவேல் இயக்கும் புதிய படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியானது. ஜங்கிலி பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் தோசா கிங் எனும் புதிய இந்தி திரைப்படத்தின் மூலம் இயக்குனர் TJ.ஞானவேல் பாலிவுட் திரையுலகில் இயக்குனராக களமிறங்குகிறார்.

தமிழகத்தின் முன்னணி உயர்தர சைவ உணவகங்களில் ஒன்றான சரவணபவன் உணவகத்தின் நிறுவனர் P.ராஜகோபாலை எதிர்த்து போராடிய ஜீவஜோதி சாந்தகுமாரின் வழக்கை மையப்படுத்திய உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இந்த தோசா கிங் திரைப்படம் தயாராக உள்ளது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த இதர தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

We are delighted to partner with the critically acclaimed director, TJ Gnanavel on our upcoming epic thriller drama, Dosa King!
Excited for this creative association as we bring this extraordinary story of Jeevajothi Santhakumar vs The Dosa King. #DosaKing @tjgnan pic.twitter.com/AixiHqvk6k

— Junglee Pictures (@JungleePictures) July 25, 2022