தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த நடிகராக உயர்ந்து நிற்கும் நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள திரைப்படம் ஜகமே தந்திரம். இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ஜகமே தந்திரம் திரைப்படத்தில் நடிகர் தனுஷ், சுருளி என்ற கதாபாத்திரத்தில் பல சம்பவங்கள் செய்யும் கேங்க்ஸ்ராக மிரட்டியுள்ளார். Y NOT ப்ரொடக்சன்ஸ் திரு.சசிகாந்த் அவர்கள் தயாரித்துள்ள இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

சந்தோஷ் நாராயணனின் இசையில் சில தினங்களுக்கு முன்பு வெளியான ஜகமே தந்திரம் திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக ரகிட ரகிட பாடல் ரசிகர்களை குத்தாட்டம் போட வைத்தது. முன்னதாக வெளியான இத்திரைப்படத்தின் டீசர் மற்றும் டிரைலர் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் ஜகமே தந்திரம் திரைப்படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் OTT தளத்தில் வருகிற 18-ஆம் தேதி வெளியாகிறது.

நடிகர் தனுஷுடன் இணைந்து பிரபல மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் மற்றும் புகழ்மிக்க ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ நடிகை ஐஸ்வர்யா லெக்ஷ்மி கலையரசன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். முன்னதாக சில நாட்களுக்கு முன்பு பாடல் வெளியீடு குறித்து ட்விட்டர் ஸ்பேசில்  இணைந்த நடிகர் தனுஷ் இசையமைப்பாளர்  சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட படக்குழுவினர் பாடல்கள் பற்றி ரசிகர்கள் மத்தியில் கலந்துரையாடிய நிலையில் அடுத்ததாக ரசிகர்களுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ் கொடுத்து இருக்கிறது ஜகமே தந்திரம் படக்குழு.

வருகிற ஜூன் 17ஆம் தேதி மாலை 4 மணி அளவில் ரசிகர்களோடு படக்குழுவினர் லைவாக ஒன்றிணையவுள்ளனர். ட்விட்டர் பேஸ்புக் மற்றும் யூடியூப் ஆகிய சமூக வலைதளங்களில் நெட்பிலிக்ஸ் இந்தியா பக்கத்தின் மூலம் ஜகமே தந்திரம் படக்குழுவினர் ரசிகர்களோடு நேரடியாக இணைய உள்ளனர். இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

அந்த அறிவிப்பில், "உங்கள் இல்லங்களில் இந்த ஆண்டின் பிரம்மாண்ட சூப்பர்ஹிட் கொங்காஸ் கூட்டத்துடன் இணைந்திடுங்கள்" "உலக ரசிகர்கள் ஒன்றிணையும் திருவிழா மெகா கொண்டாட்டத்தில் பங்கேற்றிடுங்கள்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் தனுஷ் உட்பட பல முன்னணி பிரபலங்கள் இந்த மெகா திருவிழாவில்  கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.