இந்திய திரை இசையின் ஒட்டுமொத்த சத்தத்தை புரட்டிப் போட்ட பெருமை இசைப்புயல் A.R.ரஹ்மானை சாரும். இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான  A.R.ரஹ்மான் தொடர்ந்து கோலிவுட், டோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என அனைத்திலும் மக்களின் மனம் கவரும் சிறந்த இசையை வழங்கி நம்பர்1 இடத்தைப் பிடித்தார்.

திரை இசை பாடல்கள் மட்டுமல்லாது அவ்வப்போது பல ஆல்பம் பாடல்களையும் வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் ஏ A.R.ரஹ்மான், முன்னதாக தமிழில் தாய் மண்ணே வணக்கம்  என்று வெளிவந்த தேசபக்தி பாடலின் மூலம் நாட்டு மக்கள் அனைவரின் மனதிலும் தேசப்பற்றை விதைத்ததோடு மட்டுமல்லாமல் அன்று முதல் இந்தப் பாடலும் அடுத்த நாட்டுப்பண் பாடல் என சொல்லும் அளவிற்கு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.  

தொடர்ந்து பலவிதமான ஆல்பம் பாடல்களை கொடுத்துள்ள இசைப்புயல்  A.R.ரஹ்மான் தற்போது புதிய ஆல்பம் பாடல் ஒன்றை வெளியிட உள்ளார்.Anthem of Hope என பெயரிடப்பட்டுள்ள இந்த ஆல்பம் பாடலை பிரபல ஹிந்தி பாடலாசிரியரான குல்சார் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்த உலகமும் பேரிடர் காலத்தில் மிகவும் உடைந்து போய் இருக்கும் இந்த காலகட்டத்தில் அனைவருக்கும் நம்பிக்கை ஊட்டும் நம்பிக்கை கீதமாக Anthem of Hope பாடல் தற்போது உருவாகியுள்ளது. 

இசைப்புயல் A.R.ரஹ்மான் இசையமைத்துள்ள  இந்தப் பாடலை நாடு முழுவதும் இருக்கும் பல முன்னணி பாடகர்கள் பாடியுள்ளனர். அல்கா யாக்னிக், K.S. சித்ரா,ஸ்ரேயா கோஷல், சாதனா சர்கம், சாஷா திருப்பதி, அர்மன் மாலிக் ,ஆசிஸ் கௌர் உள்ளிட்டோர் பாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது வெளியாகியுள்ள இந்த ப்ரோமோ வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.