இந்தியாவின் முன்னணி பாடகர்களில் மிகப்பெரும் ஜாம்பவானாக , கிட்டத்தட்ட 50 ஆண்டுகளளாக இருந்து வந்தவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.தனது காந்தக்குரலால் பல இதயங்களை மயக்கும் மகிமை கொண்டவர்.15 மொழிகளில் 40 ஆயிரம் பாடல்களைப் பாடியுள்ளார் ஒரே நாளில் 19 தமிழ் பாடல்களைப் பாடி சாதனை படைத்துள்ளார். மேலும் 40 படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

எம்.எஸ்.விஸ்வநாதன்,இளையராஜா போன்றவர்கள் தொடங்கி ஏ.ஆர்.ரஹ்மான்,அனிருத்,இமான் என்று தற்போதைய ஜெனரேஷன் இசையமைப்பாளர்கள் வரை அனைவருடனும் பணியாற்றியுள்ளார் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.மேலும் சில படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து அசத்தியுள்ளார் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.

ஆகஸ்ட் 5-ம் தேதி எஸ்.பி.பிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.கடந்த ஒரு மாதமாக தீவிர சிகிச்சையில் இருந்து வந்தார் எஸ்.பி.பி,சில நாட்களுக்கு முன் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது.ஆனால் நேற்று திடிரென்று இவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது.

இந்நிலையில் இன்று மதியம் எஸ்.பி.பி காலமானார் என்ற செய்தி கேள்விப்பட்டு பல ரசிகர்கள்,பிரபலங்கள் என்று இந்தியாவே சோகத்தில் மூழ்கியுள்ளது.எஸ்.பி.பி குறித்த தங்கள் நினைவுகளையும்,இரங்கல்களையும் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.தற்போதுஎஸ்.பி.பியின் நீண்ட கால நண்பரும் இசையமைப்பாளருமான இசைஞானி இளையராஜா ஒரு வீடீயோவை வெளியிட்டுள்ளார்.அதில் "பாலு, சீக்கிரம் எழுந்து வா.. உன்னைப் பார்க்கக் காத்திருக்கிறேன் என்று சொன்னேன். கேட்கல. நீ கேட்கல. போயிட்ட. எங்க போன? கந்தவர்களுக்காகப் பாடுவதற்காகப் போயிட்டியா? இங்க உலகம் ஒரே சூனியமாகப் போச்சு. உலகத்துல ஒன்றுமே எனக்குத் தெரியல. பேசுறதற்குப் பேச்சு வரல. சொல்றதுக்கு வார்த்தை இல்ல. என்ன சொல்றதுன்னே தெரியல" என்று நண்பரின் பிரிவு குறித்து மிகவும் மனமுடைந்து பேசியுள்ளார் இளையராஜா