தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாகவும் வசூல் சக்கரவர்த்தியாகவும் திகழும் தளபதி விஜய் மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் #தளபதி67 திரைப்படத்தில் அடுத்ததாக நடிக்க இருக்கிறார். இது குறித்து அறிவிப்புகளுக்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருக்கின்றனர்.

இதனிடையே முதல்முறையாக தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் தற்போது நடித்து வரும் திரைப்படம் வாரிசு. தளபதி விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க, பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷ்யாம், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், குஷ்பூ, சங்கீதா க்ரிஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். 

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் வாரிசு திரைப்படத்திற்கு தமன்.S இசையமைக்கிறார். அடுத்த ஆண்டு (2023) பொங்கல் வெளியீடாக வாரிசு திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே பொங்கல் வெளியீடாக அஜித்குமாரின் துணிவு திரைப்படமும் ரிலீஸாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக நேற்று (நவம்பர் 5) வாரிசு திரைப்படத்தின் முதல் பாடலாக ரஞ்சிதமே பாடல் வெளிவந்து ரசிகர்களை கவர்ந்துள்ளது. அதேபோல் துணிவு படத்தின் முதல் பாடலுக்காகவும் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். சமீபத்தில் துணிவு படத்தின் முதல் பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடி இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது வாரிசு திரைப்படத்திலும் ஒரு பாடலை அனிருத் பாடவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வருகின்றன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.