அடுத்த ஆண்டு (2023) மார்ச் 12-ம் தேதி 95 வது ஆஸ்கார் விருதுகள் கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி திரையரங்கில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.இந்த 95-வது ஆஸ்கார் விருதுகளுக்கான திரைப்படங்களின் தேர்வுகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. குஜராத்தி படமான லாஸ்ட் ஃபிலிம் ஷோ திரைப்படம் இந்தியா சார்பாக ஆஸ்காருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

இந்திய சினிமாவின் சிறந்த இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் பான் நளின் இயக்கத்தில் லாஸ்ட் ஃபிலிம் ஷோ படத்தில் பவின் ரபரி, பவிஷ் ஸ்ரிமலி, ரிச்சா மீனா, திபன் ராவல், விகாஸ் பாலா, மேத்தா, ராகுல் கோலி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். லாஸ்ட் ஃபிலிம் ஷோ திரைப்படத்திற்கு ஸ்வப்னா.S.சோனாவேன் ஒளிப்பதிவு செய்ய சிறில் மோரின் இசையமைத்துள்ளார். 

செல்லோ ஷோ, மான்சூன் ஃபிலிம்ஸ் மற்றும் ஜகாத் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள லாஸ்ட் ஃபிலிம் ஷோ திரைப்படம் இறுதிப் பட்டியல் வரை தேர்வாகி ஆஸ்கார் விருதை வெல்ல வேண்டும் என இந்திய ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். இந்நிலையில் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த குழந்தை நட்சத்திரமான ராகுல் கோலி மரணமடைந்துள்ளார்.

லுக்கேமியா பிளட் கேன்சரால் பாதிக்கப்பட்ட ராகுல் கோலி கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி திடீரென உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மூன்று முறை ரத்த வாந்தி எடுத்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி வெறும் 10 வயதில் குழந்தை நட்சத்திரம் மரணம் அடைந்தார். அவரது மரணம் திரையுலகினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கலாட்டா குழுமமும் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.