தமிழ் சினிமாவின் அதிரடி ஆக்சன் கதாநாயகர்களில் ஒருவராக திகழும் நடிகர் விஷால் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் சக்ரா. இதனையடுத்து அரிமா நம்பி, இருமுகன், நோட்டா உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள எனிமி திரைப்படத்தில் நடிகர் விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடித்துள்ளனர்.

அதிரடி ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமாக தயாராகியிருக்கும் எனிமி  திரைப்படம் வருகிற அக்டோபர் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. தொடர்ந்து விஷாலின் வீரமே வாகை சூடும் திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வரும் இந்நிலையில் விஷால் 32 திரைப்படத்தை தொடங்கினார் நடிகர் விஷால்.

நடிகர்கள் ராணா மற்றும் நந்தா இணைந்து தயாரிக்கும் விஷால் 32 திரைப்படத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக நடிகை சுனைனா கதாநாயகியாக நடிக்கிறார். விஷால் 32 படத்தை அறிமுக இயக்குனர் வினோத் குமார் இயக்குகிறார். பிரபல இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் இசையமைக்க பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார்.

பரபரப்பாக நடைபெற்று வரும் விஷால் 32 படப்பிடிப்பின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது இத்திரைப்படத்தின் படபிடிப்பில் இளையதிலகம் பிரபு இணைந்துள்ளார். முன்னதாக விஷாலுடன் தாமிரபரணி, ஆம்பள உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்த இளைய திலகம் பிரபு அவர்கள் மீண்டும் விஷால் 32 படத்தில் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.