சென்னையின் மதுரவாயல் (மதுரவாயில் தாம்பரம் பைபாஸ் அருகில்) அருகில் வனரகத்தில் இருக்கும் தனியாருக்கு சொந்தமான சினிமா செட் அமைக்கும் நிறுவனம் இயங்கி வருகிறது. சினிமா படப்பிடிப்புகளுக்கு தேவையான செட் அமைக்கும் இந்த தனியார் நிறுவனத்தில் இன்று திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது 

தனியார் சினிமா செட் அமைக்கும் நிறுவனத்தின் கட்டிடத்தின் ஒரு பகுதியில் ஏற்பட்ட தீ மளமளவென அந்த கட்டிடத்தின் அனைத்து பக்கங்களிலும் தீவிரமாக பரவியுள்ளது. உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு கோயம்பேடு, பூந்தமல்லி, தாம்பரம், ஆவடி உள்ளிட்ட 8-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களும் பல தீயணைப்பு குழுவினரும் சேர்ந்து தீயை கட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்து வருகிறார்கள். 

தீ விபத்து  ஏற்பட்டுள்ள கட்டிடத்திலிருந்து அதிகப்படியான கரும்புகை தற்போது வெளியேறி வரும் நிலையில் பொதுமக்கள் பலரும் அந்த பகுதியில் நின்று வேடிக்கை பார்த்து வருவதால் மதுரவாயில் - கோயம்பேடு சாலையில் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தீ விபத்திற்கான காரணம் குறித்து முதல்கட்ட விசாரணைகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மிகவும் பிரபலமான சினிமா செட் அமைக்கும் நிறுவனங்களில் ஒன்றான இந்த தனியார் நிறுவனத்தில் திடீரென ஏற்பட்ட இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான சினிமா செட் அமைக்கும் பொருட்களும் தீயில் எரிந்து நாசமாகி இருக்கலாமென தெரிகிறது.