கடந்த 1966-ம் ஆண்டு மார்ச் 5ம் தேதி இங்கிலாந்தில் உள்ள கென்ட் எனும் இடத்தில் பிறந்தவர் பால் ரிட்டர். இவர் ஏப்ரல் 5ம் தேதி இரவு உடல் நலக் குறைவு காரணமாக காலமானர். தியேட்டர் கலைஞரும் நடிகருமான இவரது திடீர் மறைவு ஒட்டுமொத்த ஹாலிவுட் திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இந்த செய்தி இப்போது வெளியாகியிருப்பதால் திரை ரசிகர்களுக்கு இப்போது தான் தெரியவருகிறது. 

55 வயது ஆகும் பால் ரிட்டர், சில ஆண்டுகளாகவே மூளை கட்டி நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த திங்கட்கிழமை இரவு தனது வீட்டிலேயே இவரது உயிர் தூக்கத்திலேயே பிரிந்து விட்டது என பால் ரிட்டரின் ஏஜெண்ட் தகவல் தெரிவித்துள்ளார்.

கடந்த 2009ம் ஆண்டு வெளியான ஹாரிபாட்டர் அண்ட் தி ஹாஃப் பிளட் பிரின்ஸ் படத்தில் எல்ட்ரட் வோர்ப்ளே எனும் கதாபாத்திரத்தில் நடித்து உலகளவில் ரசிகர்களை ஈர்த்தவர் இவர். உலகளவில் உள்ள ஹாரிபாட்டர் ரசிகர்கள் இவரின் நடிப்பை பாராட்டினர். 

மேலும், ஏகப்பட்ட படங்களிலும் டிவி தொடர்களிலும் நடித்து கலக்கியவர். HBOவில் வெளியான செர்னோபில் தொடர் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்களை பெற்றுத் தந்தது. ஹாரிபாட்டரை தொடர்ந்து குவாண்டம் ஆஃப் சொலாஸ் எனும் ஜேம்ஸ் பாண்ட் படத்திலும் மிரட்டலான கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் பால் ரிட்டர். 

இவருக்கு இருக்கும் உடல் நலக் குறைவு குறித்து இதுவரை வெளிப்படையாக சொல்லாமல் இருந்த நிலையில், இவரது திடீர் மறைவு திரைத்துறை பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.