வாசகர்களால் அதிகம் வாசிக்கப்பட்ட தமிழ் நாவல்களில் மிக முக்கியமான நாவல் கல்கியின் பொன்னியின் செல்வன். நேர்த்தியான உணர்வுகளுடன் அட்டகாசமான நடையுடன் எழுதப்பட்ட இந்த நாவல் தமிழ் சினிமாவில் பல ஜாம்பவான்களால் திரைப்படமாக எடுக்க முயன்றும் பல சிக்கல்களை கடந்து இந்தியாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் மணிரத்தினம் இந்த நாவலை திரைப்படமாக எடுத்து முடித்தார். லைகா தயாரிப்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படத்தில் சியான் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லக்ஷ்மி, சோபிதா, விக்ரம் பிரபு,, அஷ்வின் காக்கமனு, பிரபு, பார்திபன், சரத் குமார, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பார்கள். பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் திரைக்கதை பிரபல எழுத்தாளர் ஜெயமோகன், இளங்கோ குமரவேல் மற்றும் இயக்குனர் மணிரத்னம் ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். ஸ்ரீகர் பிராசாத் படத்திற்கு படத்தொகுப்பு செய்ய ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படத்தின் அறிவிப்பில் இருந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை பெற்ற பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி உலகளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று கவனம் பெற்றது. இதையடுத்து படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28 ம் தேதி உலகமெங்கிலும் வெளியாகவுள்ளது. பல இடங்களில் முன்பதிவு மும்முரமாக நடைபெற்று கொண்டிருக்கும் வேலையில் படத்தில் நடித்த நடிகர்கள் இந்தியா முழுவதும் முக்கிய நகரங்களில் திரைப்படத்திற்கான விளம்பரத்திற்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் படத்தில் ஆதித்ய கரிகாலன், நந்தினிக்கும் இடையே உள்ள காதலின் வெளிபாடாய் உருவான ‘சின்னஞ்சிறு நிலவே’ பாடலின் வீடியோ வெளியாகியுள்ளது. இளங்கோ கிருஷ்ணன் வரிகளில் ஏ ஆர் ரகுமான் இசையில் உருவான இப்பாடலை ஹரிசரண் பாடியுள்ளார். பால்ய கால காதல் தொடங்கி பிரிவில் வாடும் ஐஸ்வர்யா ராய் மற்றும் விக்ரம் காதலை அழகாக காட்டியிருக்கும் இந்த பாடலின் வீடியோ தற்போது ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
முன்னதாக படத்தில் இடம்பெற்றுள்ள மற்ற பாடல்கள் தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் ‘அகநக’, ‘வீர ராஜா வீரா’, ‘சிவஹோம்’ மற்றும் PS Anthem ஆகிய பாடல்கள் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்களிடம் பெற்று தற்போது டிரெண்ட்டிங்கில் உள்ளது குறிப்பிடத்தக்கது.