தமிழ் திரையுலகில் இளம் ஹீரோக்களில் ஒருவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். பியார் ப்ரேமா காதல், இஸ்பேடுராஜாவும் இதயராணியும் போன்ற படங்களால் இளைஞர்கள் விரும்பும் நாயகனாக திகழ்கிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான தாராள பிரபு திரைப்படம் ஊரடங்கு காரணமாக திரையரங்கில் ஓட முடியாமல் போனது, இருந்தாலும் ஆன்லைனில் வெளியாகி அசத்தலான வரவேற்பு கிடைத்தது.

கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் படப்பிடிப்பு ஏதும் இல்லாமல் திரைத்துறை கடுமையான நெருக்கடியில் இருப்பதை கருத்தில் கொண்டு, தயாரிப்பாளர்களின் நன்மைக்காக, தனது சம்பளத்தில் ஒரு பகுதியை குறைப்பதாக தெரிவித்து அசத்தினார். 

சென்ற லாக்டவுனில் கொரோனா விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். பணிக்கு செல்வோர்கள் தெர்மல் ஸ்கேனிங் செய்ய வேண்டும். கண்ட இடங்களில் எச்சில் துப்பக்கூடாது, எப்போதும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். சோப்பு போட்டு கைகளை கழுவவேண்டும். கழிவறைகளில் கிருமிநாசினிகள் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். யாருக்கும் கை கொடுக்காமல் வணக்கம் வைக்க பழக வேண்டும். அரசாங்கம் தரக்கூடிய விதிமுறைகளை கடைப்பிடித்தாலே இந்த கொரோனாவில் இருந்து விடுபடலாம் என அறிவுறுத்தியிருந்தார் ஹரிஷ் கல்யாண். 

தாராள பிரபு, தனுசு ராசி நேயர்களே உள்ளிட திரைப்படங்கள் கலகலப்பான காமெடி காட்சிகளுடன் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்ற நிலையில் இப்பொழுது முதன்முறையாக நடிகை பிரியா பவானி சங்கர் உடன் இணைந்து தெலுங்கில் மிகப்பெரிய வெற்றி பெற்ற பெல்லி சூப்புளு என்ற திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் புற்று நோயால் பாதிக்கப்பட்டு கைவிடப்பட்டவர்களை அவர்கள் இறுதி நிமிடங்கள் வரை மிகுந்த அக்கறையுடன் பார்த்துக் கொள்ளும் ஸ்ரீமாதா புற்று நோய் மருத்துவமனை நிறுவனத்தின் விஜயஸ்ரீக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்தவாறு, அவரின் 8 ஆண்டுகால ஈடு இணையற்ற சேவைக்கு உதவும் வகையில் உதவிக்கரம் நீட்டி ஒரு பெரும் தொகையை அளித்து மகிழ்ச்சி அடைந்ததோடு இப்பொழுது இணையதளத்தின் பலரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறார் ஹரிஷ் கல்யாண்.