கடந்த ஆண்டு சுதா கொங்கரா - சூர்யா கூட்டணியில் ஓடிடி தளத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் சூரரைப்போற்று. இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்தப் படம் எடுக்கப்பட்டிருந்தது. இந்தப் படத்தை அடுத்து நவரசா என்ற ஆந்தாலஜியில் கவுதம்மேனன் கதையில் நடித்தார் சூர்யா. 

தற்போது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம் சூர்யா 40 என்று தற்காலிகமாக அழைக்கப்பட்டு வருகிறது. இதனிடையே கடந்த ஆண்டு ஜூன் மாதம் 23-ம் தேதி வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் வாடிவாசல் திரைப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. 

ஜல்லிக்கட்டு தொடர்பான படம் என்பதாலும் சூர்யா - வெற்றிமாறன் கூட்டணி முதல்முறையாக இணைந்திருப்பதாலும் இந்தப் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. வாடிவாசல் படத்துக்கு முன்பாக சூரி ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன். அதேவேளையில் பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார் சூர்யா. 

பாண்டிராஜ் படத்தை முடித்த பின்னர் வாடிவாசல் படத்தில் சூர்யா இணைவார் என தெரிகிறது. இந்நிலையில் வாடிவாசல் படத்துக்கான இசைப்பணிகள் தொடங்கியிருப்பதாக அந்தப் படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

புதிதாக கிடைத்திருக்கும் இந்த அப்டேட்டால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சூர்யாவின் ஹேர்ஸ்டைல் மற்றும் லேட்டஸ்ட் கெட்டப்பை பார்த்த ரசிகர்கள் கொண்டாடி ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.