தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் அஜித்குமார் நடிப்பில் கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி வெளிவந்த வலிமை படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டாகியுள்ளது. தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில் இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக வெளிவந்த வலிமை படத்தில் காவல்துறை அதிகாரியாக அஜித்குமார் நடித்துள்ளார்.

இதனையடுத்து மீண்டும் போனி கபூர் தயாரிப்பில் அஜித் குமார் நடிக்கும் #AK61 படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் இத்திரைப்படத்தையும் இயக்குனர் H.வினோத் இயக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் அஜித்குமார் மற்றும் இயக்குனர் சுதா கொங்கரா இணையும் படம் குறித்த முக்கிய தகவல் தற்போது வெளியானது.

மாதவனின் இறுதிச்சுற்று மற்றும் சூர்யாவின் சூரரைப்போற்று ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் சுதா கொங்கரா கடைசியாக நெட்ஃபிலிக்ஸில் நேரடியாக ரிலீஸான பாவக் கதைகள் ஆந்தாலஜி படத்தில் தங்கம் எனும் எபிசோடை இயக்கினார். இதனைத் தொடர்ந்து இயக்குநர் சுதா கொங்கரா அடுத்ததாக நடிகர் அஜித் குமாரை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில்  இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் #AskGV-ல் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வந்தபோது அஜித்குமார் சுதா கொங்கரா படம் குறித்தும் பேசியுள்ளார். அதில் “இயக்குனர் சுதா கொங்கரா அஜீத் குமாரை இயக்குவதற்கு கட்டாயமாக வாய்ப்புகள் உள்ளன. எனக்கும் அந்த படத்தில் அதிக ஆர்வம் உள்ளது. கண்டிப்பாக அது நடைபெறும்போது பயங்கரமாக இருக்கும். நான் முன்பே சொல்லியிருக்கிறேன் சுதா கொங்கரா ஒரு சிறந்த இயக்குனர். அவர் அஜித் சாருக்காக அட்டகாசமான ஸ்கிரிப்ட் தயார் செய்துள்ளார்” என தெரிவித்துள்ளார். இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் படம் குறித்து ஜீவி பிரகாஷ் குமார் பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ இதோ…