இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தளபதி விஜய், அஜித், விக்ரம், சூர்யா, தனுஷ் என தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் அனைவரின் திரைப்படங்களுக்கும் இசையமைத்து தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருகிறார்.

கடைசியாக இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா கதாநாயகனாக நடித்த சூரரைப்போற்று ஒரு திரைப்படத்தில் ஜிவி பிரகாஷின் பின்னணி இசையும் ,பாடல்களும் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றது .இதனையடுத்து முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக தயாராகியிருக்கும் தலைவி தொகை படத்திற்கும் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் கதாநாயகனாகவும் தற்போது நடித்து வரும் ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் ஐங்கரன், அடங்காதே, ஜெயில் உள்ளிட்ட திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளிவர தயாராகியுள்ளன. இந்நிலையில் அடுத்த புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பை இன்று தொடங்கியுள்ளார். 

தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படத்தில் நடிகர் ஜிவி பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடிக்கிறார் .இப்படத்தை ஸ்கைமேன் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் தயாரிப்பாளர் கலைமகன் தயாரிக்கிறார். இப்படத்தில் நடிகர் ஜிவி பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக நடிகை காயத்ரி கதாநாயகியாக நடிக்கிறார். 

இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையோடு தொடங்கியுள்ளது. புதிய படத்தின் பூஜையில் இயக்குனர் சீனு ராமசாமி, நடிகர் ஜிவி பிரகாஷ் மற்றும் தயாரிப்பாளர் கலைமகன் ஆகியோர் கலந்து கொண்டனர். விரைவில் இத்திரைப்படம் குறித்து அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.