தமிழ் திரை உலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக ரசிகர்களுக்கு பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்த இசை அமைப்பாளர் ஜீவி பிரகாஷ் குமார் அடுத்தடுத்து முன்னணி கதாநாயகர்களான தனுஷின் மாறன் & வாத்தி, கார்த்தியின் சர்தார், ராகவா லாரன்ஸின் ருத்ரன், அருண் விஜய்யின் யானை உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் நடிகராகவும் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் ஜீவி பிரகாஷ் குமார். முன்னதாக இயக்குனர் மதிமாறன் இயக்கத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் உடன் இணைந்து செல்ஃபி, இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் இடிமுழக்கம் ஆகிய திரைப்படங்கள் ஜீவி பிரகாஷ் குமார் நடிப்பில் நிறைவடைந்து விரைவில் ரிலீஸாக தயாராகி வருகின்றன. 

அடுத்ததாக அறிமுக இயக்குனர் நிகேஷ் இயக்கத்தில் ரெபெல் படத்தில் தற்போது நடித்து வருகிறார். இதனிடையே முன்னதாக ஜீவி நடிப்பில் கடந்த ஆண்டு (2021) டிசம்பர் 3ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் பேச்சுலர். Axess ஃபிலிம் ஃபேக்டரி,G.டில்லிபாபு தயாரிப்பில் பேச்சுலர் படத்தை இயக்குனர் சதீஷ் செல்வகுமார் இயக்கியுள்ளார்.

தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ள பேச்சுலர் படத்திற்கு சித்துகுமார் பின்னணி இசை சேர்க்க, திபு நினன் தாமஸ், சித்துகுமார், ஜீவி பிரகாஷ், காஸீஃப் ஆகியோர் இணைந்து பாடல்களுக்கு இசை அமைத்துள்ளனர். திரையரங்குகளில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற பேச்சுலர் திரைப்படம் தற்போது OTT தளத்திலும் ரிலீசாகிறது. வருகிற ஜனவரி 21ஆம் தேதி Sony LIV தளத்தில் பேச்சுலர் படம் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.