ஆகச்சிறந்த நடிகராகவும் நல்ல தயாரிப்பாளராகவும் தொடர்ந்து சிறந்த படைப்புகளை வழங்கி வரும் சூர்யாவின் திரை பயணத்தில் மணி மகுடமாக அமைந்த திரைப்படம் சூரரைப்போற்று. இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில், சூர்யா தனது 2டி என்டர்டெய்ன்மென்ட் சார்பில் தயாரித்து நடித்த சூரரைப்போற்று திரைப்படம் அமேசான் பிரைம் வீடியோவில் நேரடியாக ரிலீசானது.

ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற சூரரைப்போற்று படம் பல சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டதோடு பல்வேறு விருதுகளையும் வாங்கிக் குவித்தது. அந்த வகையில் சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்ட 68-வது இந்திய தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த திரைப்படம், சிறந்த திரைக்கதை, சிறந்த இசையமைப்பாளர், சிறந்த நடிகர் மற்றும் சிறந்த நடிகை உள்ளிட்ட விருதுகளை சூரரைப்போற்று திரைப்படம் கைப்பற்றியுள்ளது.

5 தேசிய விருதுகளைப் பெற்ற சூரரைப்போற்று படக்குழுவினருக்கு ஒட்டுமொத்த திரையுலகமும் ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். முன்னதாக சூரரைப்போற்று திரைப்படம் நடிகர் அக்ஷய் குமார் கதாநாயகனாக நடிக்க பாலிவுட்டில் ரீமேக் செய்யப்படுகிறது. இப்படத்தில் சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். 

CAPE OF GOOD FILMS, ABUNDANTIA ENTERTAINMENT ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து சூர்யா தனது 2D என்டர்டெய்ன்மென்ட் சார்பாக தயாரிக்க, இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகிவரும் சூரரைப்போற்று ஹிந்தி ரீமேக் படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் பாடல்கள் குறித்த முக்கிய தகவலை இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ்குமார் பகிர்ந்துள்ளார். சூரரைப்போற்று ஹிந்தி ரீமேக் திரைப்படத்திற்காக மூன்று பாடல்களை ரெக்கார்ட் செய்து முடித்துவிட்டதாகவும் முற்றிலும் புதிய டியூனில் மூன்று பாடல்களும் பின்னணி இசையும் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
 

Finished recording three songs for #sooraraipottru Hindi remake . Will be a completely fresh album with new tunes and songs . And new bgscore … super charged about it … @Sudha_Kongara @akshaykumar @Suriya_offl

— G.V.Prakash Kumar (@gvprakash) July 24, 2022