காதலித்துவிட்டுத் தலைமறைவான காதலனை கண்டுபிடித்துத் தரக்கோரி இளம் பெண் ஒருவர் காதலன் வீட்டின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி அருகே எஸ்.நாட்டமங்கலம் பகுதியைச் சேர்ந்த 21 வயதான கவுசல்யா, சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ.முடித்து விட்டு வீட்டிலிருந்து வருகிறார். இவர் கல்லூரியில் படிக்கும்போது, அதே ஊரைச் சேர்ந்த பூபதியும், கவுசல்யாவும் ஒருவரை ஒருவர் காதலித்ததாகத் தெரிகிறது. ஆனால், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கவுசல்யா, பூபதியை வற்புறுத்தியுள்ளார். அதற்கு, “வெவ்வேறு மதத்தைச் சார்ந்தவர்கள் என்பதால், வீட்டில் சம்மதிக்கமாட்டார்கள்” என்று பூபதி கூறியதாகத் தெரிகிறது. 

girl protests in front of lover home Salem

இதனால், அதிர்ச்சியடைந்த கவுசல்யா, பலமுறை பூபதியைச் சந்தித்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். ஒருகட்டத்தில் கவுசல்யா, தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படவே, அவரது பெற்றோர்கள் காதலுக்கு அனுமதி தந்துள்ளனர். இதனையடுத்து, காதலுடன் தன்னை சேர்த்து வைக்குமாறு கவுசல்யா கொண்டலாம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக போலீசார் விசாரித்து வரும் நிலையில் பூபதி வீட்டிற்கு கவுசல்யா சென்றுள்ளார். ஆனால், வீடு பூட்டியிருந்ததால், வீட்டின் முன்பு அமர்ந்து கவுசல்யா தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

girl protests in front of lover home Salem

இளம் பெண்ணின் போராட்டத்தால், எஸ்.நாட்டமங்கலத்தைச் சேர்ந்த ஏராளமான கிராம மக்கள் கவுசல்யாவைச் சமாதானம் செய்தனர். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த கவுசல்யா, “என்னைத் திருமணம் செய்ய மறுத்த பூபதி, தற்போது உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? என்று தெரியவில்லை” என்று கூறினார். மேலும், “அவர் எங்கே இருக்கிறார் என்பதைக் கண்டுபிடித்துத் தரவேண்டும் என்றும், தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும்” என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.