தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் தரணியின் இயக்கத்தில் வெளிவந்த கில்லி திரைப்படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகர் மாறன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். கில்லி திரைப்படத்தில் விஜய்யின்  நண்பர்களில் ஒருவராக நடித்த மாறன் தொடர்ந்து டிஷ்யூம் திரைப்படத்திலும் நகைச்சுவை வேடத்தில் நடித்திருந்தார். 

தலைநகரம் திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலு “நானும் ரவுடி தான் நானும் ரவுடி தான், ஜெயிலுக்கு போறேன் ஜெயிலுக்கு போறேன்” என காமெடி  செய்த அந்த நகைச்சுவை காட்சியில் இணைந்து நடித்து மிகவும் பிரபலம் அடைந்தார். தொடர்ந்து தளபதி விஜய்யின்  வேட்டைக்காரன் திரைப்படத்திலும் நடித்திருந்தார். 

தமிழ் சினிமாவில் காமெடி கதாபாத்திரங்களிலும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வந்த நடிகர் மாறன். அடிப்படையில் ஒரு ஸ்டன்ட் கலைஞர் ஆவார்.  கடைசியாக இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யாவின் நடிப்பில் உருவாகியுள்ள சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.  

தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டு தீவிர சிகிச்சை எடுத்து வந்த நடிகர் மாறன் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தொடர்ந்து கொரோனாவால் பல திரைப்பிரபலங்கள் பாதிக்கப்பட்டு அடுத்தடுத்து உயிரிழந்து வருகிறார்கள். சமீபத்தில் காமெடி நடிகர் பாண்டு இயக்குனர் கே.வி.ஆனந்த் என பல  பிரபலங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்து வருவது திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.