தமிழ் திரையுலகின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவராகவும் தமிழ் சினிமா ரசிகர்களின் ஃபேவரட் இயக்குனராகவும் திகழும் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் அடுத்ததாக நடிகர் சிலம்பரசன் கதாநாயகனாக நடிக்கும் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இயக்குனராக மட்டுமல்லாமல் தற்போது பல திரைப்படங்களில் நடிகராகவும் மிரட்டி வரும் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், முன்னதாக இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் சூரி இணைந்து நடித்துள்ள விடுதலை திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளிவந்து மெகா ஹிட்டான காக்க காக்க திரைப்படத்தில் நடிகர் சூர்யாவின் கதாபாத்திரமான அன்புச்செல்வன் கதாபாத்திரம் இன்றும் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த போலீஸ் கதாபாத்திரங்களில் ஒன்று. அந்த வகையி்ல் கௌதம் மேனன் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம் என “அன்புச்செல்வன் The COP Devil” என்ற ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்னு வெளியானது. 

செவன்டி MM ஸ்டுடியோஸ் தயாரிப்பில், இயக்குனர் வினோத் குமார் இயக்கும் அன்புச்செல்வன் திரைப்படத்தில் மிரட்டலான காவல்துறை அதிகாரியாக கௌதம் வாசுதேவ மேனன் நடிப்பதாகவும் இப்படத்திற்கு சிவா பத்மாயன் இசையமைக்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து இப்படத்தின் அடுத்தடுத்து அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கௌதம் வாசுதேவ் மேனன் இப்படத்தின் அறிவிப்பை முற்றிலுமாக மறுத்துள்ளார்.

இத்திரைப்படம் பற்றி தனக்கு தெரியவே தெரியாது என்றும் இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் இருக்கும் அந்த இயக்குனரை பார்த்ததே இல்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனுக்கே தெரியாமல் அவர் கதாநாயகனாக நடிக்க உள்ளார் என வெளியான இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.