இயக்குனர் மணிரத்னத்தின் கடல் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். தமிழ் சினிமாவின் நவரச நாயகன் நடிகர் கார்த்திக்கின் மகனான கௌதம் கார்த்திக் தொடர்ந்து பல தமிழ் திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

அந்தவகையில் அடுத்ததாக மாத்தியோசி மற்றும் ஒரு கல்லூரியின் கதை உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் தயாராகி வரும் ஆனந்தம் விளையாடும் வீடு திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் நடிகர் இயக்குனர் சேரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஸ்ரீவாரி பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் பி ரங்கநாதன் ஆனந்தம் விளையாடும் வீடு திரைப்படத்தை தயாரித்துள்ளார் 

பிரபல இளம் நடிகை ஷிவாத்மிகா கதாநாயகியாக நடிக்க மௌனிகா, சரவணன், சினேகன், ஜாக்குலின், மைனா, சுஜிதா, சிங்கம் புலி, டேனியல் பாலாஜி, நமோ நாராயணன், சௌந்தர்ராஜன், நக்கலைட்ஸ் தனம் உள்ளிட்ட மிகப் பெரிய நடிகர் பட்டாளமே நடித்துள்ளது. அழகான குடும்ப திரைப்படமாக தயாராகி வரும் ஆனந்தம் விளையாடும் வீடு திரைப்படத்திற்கு மாயாண்டி குடும்பத்தார் படத்தின் ஒளிப்பதிவாளர் பாலபரணி ஒளிப்பதிவு செய்கிறார் இசையமைப்பாளர் சித்து குமார் இசையமைக்கிறார்.

பரபரப்பாக நடைபெற்று வரும் ஆனந்தம் விளையாடும் வீடு படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல்லில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் தற்போது திண்டுக்கல்லில் நடைபெற்று வந்த படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளது. படப்பிடிப்பை நிறைவு செய்துவிட்டு படக்குழுவினர் அனைவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தற்போது சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.