தமிழ் சினிமாவில் கமர்ஷியல் திரைப்படங்கள் என்றாலே கட்டாயம் இயக்குனர் ஹரியின் திரைப்படங்கள் அந்த வரிசையில் இடம் பிடிக்கும். நடிகர் பிரஷாந்த் கதாநாயகனாக நடித்த தமிழ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான ஹரியின் இயக்கத்தில் அடுத்து வெளிவந்த சாமி திரைப்படம் மெகா ஹிட்டானது.

தொடர்ந்து கோவில், அருள், ஐயா, ஆறு, தாமிரபரணி, வேல், சிங்கம் என பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்து வரும் இயக்குனர் ஹரியின் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் சாமி ஸ்கொயர். நடிகர் விக்ரம் திரிஷா நடித்து சூப்பர் ஹிட்டான சாமி படத்தின் இரண்டாம் பாகமாக வெளிவந்த சாமி ஸ்கொயர் திரைப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தது.

அடுத்ததாக நடிகர் அருண் விஜய் உடன் இணைந்திருக்கும் இயக்குனர் ஹரி இயக்கத்தில் AV33 திரைப்படம் தயாராகி வருகிறது. இதில் கதாநாயகியாக நடிகை ப்ரியா பவானி சங்கர் நடிக்க, நடிகை ராதிகா சரத்குமார், நடிகர் பிரகாஷ்ராஜ், யோகிபாபு, அம்மு அபிராமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

டிரம்ஸ்டிக்ஸ் புரோடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சக்திவேல் தயாரிக்கும் AV33 படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். விறுவிறுப்பாக  இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு பிரபல நடிகர் படத்தில் இணைந்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரும் இயக்குனருமான கங்கை அமரன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அருண் விஜய்யின் AV33 திரைப்படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.