தமிழகத்தின் மிகப் பிரபலமான திரையரங்குகளில் ஒன்றாக ராணிப்பேட்டையில் சோளிங்கரில் அமைந்துள்ளது சுமதி MINI திரையரங்கம். ராணிப்பேட்டை சினிமா ரசிகர்களின் ஃபேவரட் திரையரங்குகளில் ஒன்றாக திகழும் சுமதி MINI திரையரங்கில் தற்போது பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

அருண் விஜயின் யானை திரைப்படம் திரையிடப்பட்டுள்ள சுமதி MINI திரையரங்கில் நேற்று ஜூலை 4-ஆம் 12.30 அளவில் இரவு நேர காட்சி நிறைவடைந்து பணியாளர்கள் அனைவரும் திரையரங்கை சுத்தம் செய்து முடித்துவிட்டு திரையரங்கை பூட்டிச் சென்றனர். இதனையடுத்து சிறிது நேரத்தில் திரையரங்கில் தொடங்கியது.

இரவு நேர காவலில் ஈடுபட்டிருந்த திரையரங்க காவலாளி உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த ராணிப்பேட்டை தீயணைப்புத் துறையினர் கட்டுக்குள் கொண்டுவர போராடினார். இருப்பினும் மளமளவென பரவிய தீ திரையரங்கு முழுவதும் பற்றி எரிந்தது.

கூடுதல் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு மிகுந்த போராட்டத்திற்கு மத்தியில் தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.ஆனாலும் அதற்குள் சுமதி மினி திரையரங்கம் முழுவதும் தீயில் எரிந்து சாம்பலானது. அதிர்ஷ்டவசமாக சுமதி மினி திரையரங்கில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ராணிப்பேட்டையில் முன்னணி திரையரங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது தற்போது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்ப்பட்டிருக்கலாம் என போலீசார் தற்போது தெரிவித்துள்ளனர். மேலும் வழக்கு பதிவு செய்து தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.