இந்திய திரை உலகின் முன்னணி நட்சத்திர நாயகராகவும், பாக்ஸ் ஆபிஸில் வசூல் சக்கரவர்த்தியாக விளங்கும் தளபதி விஜய் அடுத்ததாக தெலுங்கில் முன்னணி இயக்குனரான வம்சி இயக்கத்தில் உருவாகும் #தளபதி66 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். முன்னதாக இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் வருகிற ஏப்ரல் 13ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகிறது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் பீஸ்ட் திரைப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்க, இயக்குனர் செல்வராகவன் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் டாம் ஷைன் சாக்கோ, யோகிபாபு, அபர்ணா தாஸ், சதீஷ் கிருஷ்ணன், ரெட்டின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

பீஸ்ட் படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார். முன்னதாக பீஸ்ட் படத்திலிருந்து வெளிவந்த அரபிக் குத்து & ஜாலியோ ஜிம்கானா ஆகிய பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்று ட்ரெண்டாகி வரும் நிலையில், மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று(ஏப்ரல் 2ஆம் தேதி) பீஸ்ட் படத்தின் ட்ரைலர் வெளியானது.

மிரட்டலான பீஸ்ட் ட்ரைலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக அதிகரித்துள்ளது. முன்னதாக பீஸ்ட் ட்ரைலர் வெளியான அதே சமயத்தில் திரையரங்குகளிலும் பீஸ்ட் ட்ரைலர் திரையிடப்பட்டது. அந்தவகையில் திருநெல்வேலியில் உள்ள பிரபல திரையரங்கமான ராம் முத்துராம் சினிமாஸ் திரையரங்கில் பீஸ்ட் ட்ரைலர் திரையிடப்பட்டது.

இந்நிலையில் பீஸ்ட் ட்ரைலரை கொண்டாடிய ரசிகர்கள், திரையரங்கின் இருக்கைகளை மோசமாக சேதப்படுத்தியுள்ளனர். மேலும் திரையரங்கின் கதவு மட்டுமல்லாது வளாகத்தில் இருக்கும் கண்ணாடி கதவுகளையும் சேதப்படுத்தியுள்ளனர். சேதமடைந்த ராம் முத்துராம் சினிமாஸ் திரையரங்கின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அந்த வீடியோ இதோ…