சுசீந்திரன் இயக்கத்தில் சிலம்பரசன் நடித்துள்ள திரைப்படம் ஈஸ்வரன். சிலம்பரசன் ஜோடியாக நிதி அகர்வால் நடிக்கிறார். பாரதி ராஜா, பால சரவணன் உள்ளிட்டோர் முக்கிய ரோலில் இந்த படத்தில் நடித்துள்ளனர். பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக தியேட்டர்களில் ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் படத்தின் முதல் சிங்கிள் தமிழன் பாட்டு வெளியானது.  

அனந்து, தீபக் மற்றும் தமன் பாடிய இந்த பாடல் வரிகளை யுகபாரதி எழுதியுள்ளார். பாடலின் லிரிக் வீடியோவை பார்க்கையில் பிரமாதாக உள்ளதென பாராட்டி வருகின்றனர். பழைய சிம்பு வந்தாச்சு என்றெல்லாம் கமெண்ட் செய்து வருகின்றனர் ரசிகர்கள். சிலம்பரசன் மற்றும் தமன் கூட்டணியில் வெளியான வாலு மற்றும் ஒஸ்தி போன்ற பாடல் ஆல்பம் அனைத்தும் ஹிட் என்பதால் மிகுந்த ஆவலில் உள்ளனர் ரசிகர்கள். 

ஈஸ்வரன் படத்தின் படப்பிடிப்பில் இருந்து சிம்பு பாம்பு பிடித்த வீடியோ வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. சிம்பு நிஜ பாம்பை பிடித்தார் என்று கூறி சென்னையை சேர்ந்த விலங்கு ஆர்வலர் ஒருவர் வனத்துறையிடம் புகார் அளித்திருந்தார். இதையடுத்து பாம்பு குறித்து விளக்கம் அளிக்குமாறு சிம்பு மற்றும் படக்குழுவுக்கு வனத்துறை அதிகாரி நோட்டீஸ் அனுப்பினார்.

அதன் பின் படத்தில் பயன்படுத்தப்பட்டது நிஜப் பாம்பு இல்லை என்று சுசீந்திரன் விளக்கம் அளித்தார். ஆனால் அதற்கான ஆதாரங்களையும் அவர் சமர்ப்பித்தார். படத்தில் பயன்படுத்தப்பட்டது ரப்பர் பாம்பு என  வனத்துறை அதிகாரிகளிடம் விளக்கினார் சுசீந்திரன். மேலும் கிராபிக்ஸ் காட்சிகளையும் போட்டுக் காண்பித்தார். சுசீந்திரன் அளித்த விளக்கம் திருப்திகரமாக இருப்பதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

முன்னதாக தீபாவளி அன்று ஈஸ்வரன் படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. டீஸருக்கு அமோக ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டார் சுசீந்திரன். சிம்பு தன் உடல் எடையை 30 கிலோ குறைத்த பிறகு நடித்துள்ள முதல் படம் ஈஸ்வரன் என்பதால் அதன் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. ஈஸ்வரன் படத்திற்கான டப்பிங் பணிகளையும் நிறைவு செய்தார் சிலம்பரசன். 

புதுச்சேரியில் நடந்து வந்த மாநாடு படத்தின் படப்பிடிப்பை முடித்த சிலம்பரசன், சென்னை ஷூட்டிங்கிற்கு தயாராகி வருகிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் மாநாடு படத்தை சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் ப்ரோடுக்ஷன் தயாரிக்கிறது.