பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மறைவை அடுத்து திரையுலகில் பரபரப்பாகி இருக்கிறது. நடிகை கங்கனா, பாலிவுட் மாஃபியாக்கள் என்று சில இயக்குனர்களை குற்றஞ்சாட்டினார். பின்னர் நெபோடிசம் பற்றிய பேச்சு சர்ச்சையானது. வாரிசு நடிகர், நடிகைகளுக்கு எதிராக அவர் பேசி வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். சமூக வலைதளங்களில் இது கடும் விவாதமாக மாறியது. பின்னர் பாலிவுட்டில் போதைப் பொருள் விவகாரம் குறித்து பரபரப்பு தகவல்களை தெரிவித்தார்.

திரை வட்டாரத்தில் யார் யார் போதைப் பொருள் பயன்படுத்துகிறார்கள் என்கிற விவரத்தை வெளியிடுவேன் என்றும் கூறியிருந்தார். இந்நிலையில் அவருக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே நடிகை மற்றும் அரசியல் பிரபலமான ரம்யா என்கிற திவ்யா ஸ்பந்தனா, ட்விட்டரில் அவருக்கு சில ஆலோசனைகளை கூறியிருக்கிறார். 

அவரது பதிவில், போதை பழக்கத்தை ஒழிக்க நிஜமாகவே எதாவது செய்ய நினைத்தால் அதற்கு எதிரான போராளியாக மாறுங்கள். ஒரு வீடியோவில் போதை பழக்கத்துக்கு அடிமையாக இருந்ததாகச் கூறியிருந்தீர்கள். உங்கள் அனுபவம் பற்றி, அதிலிருந்து மீண்டது பற்றி, போதை மருந்து ஏன் மோசமானது என்பது பற்றி சொல்லுங்கள். நடிகர் சஞ்ஜய் தத் அதை செய்துள்ளார்.

ஒருபுறம் சக நடிகையான தீபிகா படுகோன் மனநலம் குறித்து நல்ல விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். மன அழுத்தம் குறித்த தனது தனிப்பட்ட அனுபவத்தை அவர் பகிர்ந்துள்ளார். மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் லட்சக்கணக்கானவர்களுக்கு உதவும் ஒரு அறக்கட்டளையை உருவாக்கி இருக்கிறார். அவரிடமிருந்து அதிகம் கற்றுக் கொள்ள வேண்டும்.

துரதிர்ஷ்டவசமாக நீங்கள் பேசும் விதம், உங்கள் நோக்கம் தவறு என தெரிகிறது. போதை பொருள் பயன்படுத்துபவர்களின் பெயர்களை அம்பலப்படுத்துவேன் என்று அச்சுறுத்துவதற்கு பதிலாக அனுதாபம் காட்டுங்கள். ஆலோசனை சொல்லுங்கள். விருப்பம் இருந்தால் ஒரு மறுவாழ்வு மையத்தை ஆரம்பியுங்கள். போதை பழக்கம் இருப்பவர்களுக்கு வாழ்வின் அழகும், இன்பமும் தெரிவதில்லை. நீங்கள் ஆன்மிகவாதி. உங்களுக்கு தெரிந்திருக்கும்.

அவர்களை வெளிப்படுத்துவதுதான் சரியானது என்று நினைத்தால், காவல்துறையிடம் ஆதாரத்தைக் கொடுங்கள். அவர்களுக்கு அது உதவும். நீங்கள் எதைச் செய்தாலும் பழிவாங்குவதற்காக அல்ல, நல்ல நோக்கத்தோடு செய்யுங்கள். கடைசியாக ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். மாற்றம் நம்மிடமிருந்து தான் தொடங்க வேண்டும். இவ்வாறு திவ்யா ஸ்பந்தனா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். 

சிம்பு நடித்த குத்து படத்தில் அறிமுகமானவர் திவ்யா ஸ்பந்தனா. அதன் பின் அர்ஜுன் நடித்த கிரி படத்தில் நடித்தார். பொல்லாதவன், வாரணம் ஆயிரம் போன்ற படங்களில் நடித்தவர் கடைசியாக சிங்கம் புலி படத்தில் நடித்தார். 

கங்கனா நடிப்பில் தலைவி திரைப்படம் உருவாகி வருகிறது. விஜய் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படம், மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று குறித்த படமாகும். இதில் ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தில் பாலிவுட் பிரபலம் கங்கனா ரனாவத் நடிக்கிறார். எம்.ஜி.ஆர் பாத்திரத்தில் அரவிந்த் சாமி நடிக்கிறார். 

இதன் ஒரே ஒரு கட்ட படப்பிடிப்பு மட்டும் மீதியுள்ளது. விஷ்ணு வர்தன் இந்துரி மற்றும் சாய்லேஷ் ஆர் சிங் உள்ளிட்டோர் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு கே.வி.விஜயேந்திர பிரசாத் கதை எழுதியுள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு மதன் கார்கி பாடல்கள் எழுதுகிறார்.